குப்பை எரிப்பதை நிறுத்த சமூகநல அமைப்பு கோரிக்கை
புதுடில்லி:காற்று மாசைக் கட்டுப்படுத்த, குப்பையை எரிக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என டில்லி அரசுக்கு சமூக நல அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.இதுதொடர்பாக, சமூக நல அமைப்புகள் டில்லி அரசுக்கு அனுப்பியுள்ள கடிதம்: தலைநகர் டில்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. காற்று மாசைக் கட்டுக்குள் கொண்டு வர டில்லி அரசு பல நடவடிக்கைகள் எடுத்தாலும், கழிவுகளை குறைக்க வேண்டும்.காற்று தர மேலாண்மை ஆணையம் கடந்த 21ம் தேதி, தன் இரண்டாம் கட்ட திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி, காற்றில் மாசைக் குறைக்க அதிகளவில் தண்ணீர் தெளித்தல், பட்டாசு வெடிக்க தடை, பார்க்கிங் கட்டணம் அதிகரிப்பு, பொது போக்குவரத்து சேவையை அதிகளவில் பயன்படுத்த அறிவுறுத்தல் ஆகியவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.இருப்பினும் டில்லியின் 4 இடங்களில் தினமும் 7,250 டன் பிரிக்கப்படாத திடக்கழிவுகள் எரிக்கப்படுகிறது. இது காற்று மாசு அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக உள்ளது.தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூட, 'குப்பையை எரிக்கும் இந்த தொழில்நுட்பத்தால், சுற்றுச்சூழல் கேடு ஏற்படுகிறது. ஏராளமானோர் உடல்நல பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக குழந்தைகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது' என கூறப்பட்டுள்ளது.ஆனால், வரும் 2027ம் ஆண்டுக்குள் தினமும் 6,000 டன் குப்பைகளை எரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.எனவே, குப்பைகளை எரிப்பதை நிறுத்தி, காற்று மாசை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.