புதுடில்லி: விண்வெளிக்கும், வேற்று கிரகங்களுக்கும் மனிதர்களை அனுப்பும் பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக, லடாக்கில் உள்ள லே நகரில், புதிய சோதனைகளை இஸ்ரோ தொடங்கியுள்ளது.இஸ்ரோ சார்பில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஆய்வுகள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன. அதேபோல, விண்வெளி மையம் ஒன்றை அமைக்கவும் இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது. வேற்று கிரகங்களுக்கு கலன்களை அனுப்பவும் அடுத்தடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அடுத்த ஆண்டு
ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்புவதற்காக விமானப்படையை சேர்ந்த மூன்று வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கான பயிற்சியை இஸ்ரோ அளித்து வருகிறது. அண்மையில் இந்தத் திட்டம் தொடர்பாக பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், பாதுகாப்பு மற்றும் திட்டத்தின் வெற்றியைக் கருத்தில் கொண்டு, ககன்யான் விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் என்று கூறியிருந்தார்.தொடக்கம்
இதற்கிடையே விண்வெளியிலும், அதற்கு அப்பால் வேற்று கிரகங்களிலும் மனிதர்கள் உயிர் வாழ்வதில் இருக்கும் சிக்கல்களை கண்டறியும் நோக்கத்திலும், இஸ்ரோ ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, லடாக்கில் உள்ள லே பகுதியில் சிறப்பு ஆய்வை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர். வேற்று கிரகங்களில் இருப்பது போன்ற சூழல் கொண்ட கலன்களை அமைத்து, ஆய்வை தொடங்கியுள்ளது இஸ்ரோ.திட்டம்
விண்வெளி அல்லது வேற்று கிரகத்தில் இருப்பது போன்ற தட்பவெப்பம் கொண்ட இடங்களில் இத்தகைய சோதனை நடத்துவதே சரி என்ற அடிப்படையில் இந்த, 'அனலாக்' சோதனை லே பகுதியில் நடத்தப்படுகிறது. புதிய தொழில்நுட்பம், ரோபோடிக் கருவிகள், வாகனங்கள், வேற்று கிரகம் அல்லது விண்வெளியில் பயன்படுத்தப்படும் வசிப்பிடங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், மின் உற்பத்தி சாதனங்கள், இடம் பெயர் சாதனங்கள், இருப்பு வைக்கும் சாதனங்கள் சோதிக்கப்பட உள்ளன.லடாக் மலை மேம்பாட்டுக்குழுமம், மும்பை ஐ.ஐ.டி., லடாக் பல்கலை ஆகியவற்றுடன் இணைந்து இஸ்ரோ இந்த சோதனையை நடத்துகிறது.