அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள் தலைமை செயலரிடம் சபாநாயகர் புகார்
விக்ரம்நகர்:மாநில அரசு அதிகாரிகளின் அலட்சியம் குறித்து, தலைமைச் செயலருக்கு கடிதம் வாயிலாக சபாநாயகர் விஜேந்தர் குப்தா புகார் தெரிவித்துள்ளார்.தலைமைச் செயலர் தர்மேந்திராவுக்கு அவர் எழுதிய கடிதம்:எம்.எல்.ஏ.,க்கள் கேட்கும் கேள்விகளுக்கு சில அதிகாரிகள் உரிய பதில் அளிக்க மறுக்கின்றனர். சட்டசபை உறுப்பினர்களிடம் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை மற்றும் நெறிமுறை குறித்து அரசு அதிகாரிகளுக்கு உரிய முறையில் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகள் வடிவில் உறுப்பினர்களின் தகவல் தொடர்புகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நிராகரிக்கப்படுவதாக என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இது ஒரு தீவிரமான விஷயம்.அனைத்து நிர்வாகச் செயலர்கள், துறைத் தலைவர்கள், டில்லி காவல்துறை, டி.டி.ஏ., பிற துறைகள், அரசின் சட்டங்களுக்கு கண்டிப்பாக இணங்குமாறு உத்தரவிட வேண்டும்.இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிய விரும்புகிறேன்.இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.