புதுடில்லி: கோல்கட்டா பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், “பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளில் மிக விரைவான விசாரணை நடத்தி, உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட விவகாரம், நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தவிர, பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களும் அதிகரித்துள்ளன. பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக பெரும் விவாதம் நடந்து வருகிறது. பாதுகாப்பு
'பாலியல் பலாத்கார வழக்குகளை விரைவாக விசாரித்து, கடுமையான தண்டனை வழங்க உரிய சட்டம் இயற்ற வேண்டும்' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி தொடர்ந்து கூறி வருகிறார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.ஏற்கனவே உள்ள சட்டங்களே, இந்தப் பிரச்னையில் மிகவும் கடுமையாக உள்ளதாகவும், அந்தச் சட்டங்களை மாநில அரசுகள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், மத்திய அரசு தரப்பில் பதில் மனு அனுப்பப்பட்டது.பெண்கள் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, சமீபத்தில் வேதனை தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியும், சில நிகழ்ச்சிகளில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக பேசினார்.இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின், 75வது ஆண்டையொட்டி, மாவட்ட நீதித்துறை மாநாடு நடத்தப்படுகிறது. இதை டில்லியில் நேற்று துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:நீதித்துறையின் வளர்ச்சி மற்றும் வசதிக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நவீன தொழில்நுட்பங்கள் நீதித்துறையின் விரைவான விசாரணைக்கு பெரிதும் உதவுகின்றன.பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சிறுமியரின் பாதுகாப்பு ஆகியவை இன்றைய சமூகத்தில் மிகவும் கவலைக்குரிய பிரச்னைகளாக உள்ளன. வன்முறை
நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்காக பல கடுமையான சட்டங்கள் உள்ளன. கடந்த, 2019ல், பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளை விசாரிக்க விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன.மேலும், பாதிக்கப்பட்டோர் பயமின்றி தங்களுடைய வாக்குமூலத்தை வழங்குவதற்காக, இந்த சிறப்பு நீதிமன்றங்களில் சிறப்பு மையமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, மாவட்ட நீதிபதி, போலீஸ் எஸ்.பி., உள்ளிட்டோரைக் கொண்ட மாவட்ட அளவிலான சிறப்புக் குழு உருவாக்கப்பட்டு, விசாரணையை வேகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.இவ்வாறு நம் நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு சட்டங்கள், கட்டமைப்புகள் உள்ளன. அதனால், இதுபோன்ற வழக்குகளில் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக விசாரித்து, உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும். இதுவே, நாட்டின் மக்கள்தொகையில், 50 சதவீதம் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும்.இவ்வாறு அவர் பேசினார்.
தலைமை நீதிபதி பாராட்டு!
நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது:உச்ச நீதிமன்றத்தின் 75வது ஆண்டில், மற்றொரு காலனியாதிக்க மனபோக்கை நாம் கைவிட போகிறோம். மாவட்ட நீதிமன்றங்களை இதுவரை, கீழமை நீதிமன்றங்கள் என்று கூறினர். இனி அவை கீழமை நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படாது. அவை மாவட்ட நீதிமன்றங்கள் என்றே அழைக்கப்படும்.மாவட்ட நீதிமன்றங்கள்தான், பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கேட்டு அணுகும் முதல் வாய்ப்பாகும். அவையே, நீதித்துறையின் அடிப்படை மற்றும் தண்டுவடம் போன்றவை. நீதியை நிலைநாட்டுவதில், மாவட்ட நீதிமன்றங்களே முக்கிய பங்காற்றுகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.