உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாநில பா.ஜ., தலைவர் தேர்தல் போட்டியில் உறுதி!.: விஜயேந்திராவை வீழ்த்த எத்னால் தயார்

மாநில பா.ஜ., தலைவர் தேர்தல் போட்டியில் உறுதி!.: விஜயேந்திராவை வீழ்த்த எத்னால் தயார்

கர்நாடக சட்டசபை தேர்தலில், பா.ஜ., தோற்றதில் இருந்தே, கட்சியில் உட்பூசல் அதிகரித்து வருகிறது. விஜயேந்திராவை மாநில தலைவராக நியமித்த பின், கட்சியில் பல கோஷ்டிகள் உருவாகியுள்ளன. தங்களை விட வயது மற்றும் அரசியல் அனுபவத்தில் சிறியவரான விஜயேந்திராவை, தங்களின் தலைவராக ஏற்க மூத்த தலைவர்கள் தயாராக இல்லை. மூத்தவர்களை மேலிடம் அலட்சியப்படுத்தியதாக பொருமுகின்றனர். குறிப்பாக, விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா, பகிரங்கமாகவே விஜயேந்திராவை காட்டமாக விமர்சிக்கிறார். தன் தந்தை எடியூரப்பாவை சிறைக்கு அனுப்பியதே இவர்தான் என, குற்றம் சாட்டுகிறார். ரமேஷ் ஜார்கிஹோளி உட்பட சில தலைவர்கள் எத்னாலுடன் கை கோர்த்துள்ளனர்.விஜயேந்திராவை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கியே ஆக வேண்டும் என, ஒற்றைக்காலில் நிற்கின்றனர். இவர்களால் கட்சியில் ஏற்படும் குழப்பங்கள் குறித்து, மேலிடத்திடம் விஜயேந்திரா புகார் அளித்தார். மேலிட தலைவர்களும் எத்னாலை கண்டித்தனர். 'வாய்க்கு வந்தபடி பேசி, கட்சிக்கு தர்மசங்கடம் ஏற்படுத்த வேண்டாம்' என, அறிவுரை கூறினார். அதை எத்னால் பொருட்படுத்தவில்லை.கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் இவரை, பா.ஜ.,வில் இருந்து நீக்கும்படி, விஜயேந்திரா ஆதரவாளர்கள் பலரும் வலியுறுத்துகின்றனர். இதற்கிடையே, மாநில தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது. விரைவில் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. சமீபத்தில் கர்நாடகாவுக்கு வந்த மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான், 'பூத் கமிட்டி தலைவர் முதல், மாநில தலைவர் வரையிலான பணியிடங்களுக்கு தேர்தல் நடத்தி, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்' என, கூறியிருந்தார். இதனால், எத்னால் கோஷ்டி குஷி அடைந்துள்ளது. இந்த தேர்தலில் தன் கோஷ்டியை சேர்ந்த ஒருவரை களமிறக்க, எத்னால் முடிவு செய்தார். வாய்ப்பு கிடைத்தால், தானே களமிறங்கி விஜயேந்திராவை வீழ்த்தவும் தயாராக இருக்கிறார். இந்நிலையில், ஜனார்த்தன ரெட்டியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால், அதிருப்தியில் உள்ள ஸ்ரீராமுலு, எத்னால் கோஷ்டியுடன் அடையாளம் காணப்படுகிறார். இந்நிலையில், விஜயபுராவில் நேற்று எத்னால் அளித்த பேட்டி:மாநில பா.ஜ., தலைவர் பதவிக்கு போட்டியிட, நான் தயாராக இருக்கிறேன். நான் போட்டியிடுவது உறுதி. வெற்றி பெறுவதும் உறுதி. எங்களுக்கு தனிப்பட்ட ஒருங்கிணைப்பு குழு உள்ளது. தகுதியான வேட்பாளரை களமிறக்குவது குறித்து ஆலோசிப்போம். கமிட்டி யாரை முடிவு செய்கிறதோ, அவரே போட்டியிடுவார். ஒருவேளை என் பெயர் முடிவு செய்யப்பட்டால், நானே வேட்பாளராக களமிறங்குவேன். மாநில பொறுப்பாளர் நடத்திய ஆலோசனை கூட்டத்துக்கு, நான் செல்லவில்லை. அங்கு எங்களுக்கு என்ன வேலை.அவருக்கு (விஜயேந்திரா) 600 எம்.எல்.ஏ.,க்கள், 1,500 எம்.பி.,க்கள், 2,000 எம்.எல்.சி.,க்களின் ஆதரவு இருக்கக்கூடும். தொண்டர்களை உற்சாகப்படுத்த கூடியவர், மாநில தலைவராக வேண்டும். இவர் (விஜயேந்திரா) இரவு துணை முதல்வர் சிவகுமார் வீட்டில் இருப்பார். காலை முதல்வர் சித்தராமையா வீட்டில் இருப்பார். அதன்பின் காலை 11:00 மணிக்கு, 'பாரத் மாதாகி ஜெய்' என்பார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை