பள்ளி பஸ் மோதி மாணவன் பலி
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி புலச்சேரிக்கரை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி ஸ்ரீதேவி. இத்தம்பதியரின் மகன் ஆரவ், 6, வாடாளாம்குறுச்சி அருகேயுள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடித்து வந்த ஆரவ், தாயுடன் வீட்டின் வெளியே சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென சாலையின் குறுக்கே ஓடிய ஆரவ் மீது அவ்வழியாக சென்ற புலாச்சேரி அரசு நடுநிலைப்பள்ளி பஸ் மோதியது.விபத்தில் படுகாயமடைந்த ஆரவ், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து, பட்டாம்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.