உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுற்றுலா ரத்து செய்வதால் மாணவர்கள் ஏமாற்றம்

சுற்றுலா ரத்து செய்வதால் மாணவர்கள் ஏமாற்றம்

மங்களூரு: மங்களூரின் முருடேஸ்வராவில் நடந்த அசம்பாவிதத்துக்கு பின், பெரும்பாலான பள்ளிகள், கல்வி சுற்றுலாவை ரத்து செய்துள்ளன. இதனால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.நவம்பர், டிசம்பர் மாதங்களில் தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம். தட்சிண கன்னடா மட்டுமல்ல, கர்நாடகாவின் அனைத்து அரசு பள்ளிகளிலும், மாணவர்கள் வெவ்வேறு இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவை அரசு ஏற்கும்.

கடல் நீர்

கோலார், முல்பாகலின் எம்.கொத்துார் கிராமத்தின் உறைவிடப் பள்ளியில் மாணவர்கள், தட்சிணகன்னடா, மங்களூரின் பிரசித்தி பெற்ற முருடேஸ்வராவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். கடலில் நீரில் விளையாடும்போது, தீக்ஷா, 15, லாவண்யா, 15, வந்தனா, 15, ஷிராவந்தி, 15, ஆகிய நான்கு மாணவியர் அலையால் இழுத்துச் செல்லப்பட்டனர்.நான்கு மாணவியர் இறந்த சம்பவத்துக்கு பின், 'மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும்போது, அவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்' என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த தலைவலியே வேண்டாம் என, கருதி மாநிலத்தின் பெரும்பாலான பள்ளிகள், கல்வி சுற்றுலாவை ரத்து செய்துள்ளன.சுற்றுலா செல்லலாம் என்ற ஆசையோடு காத்திருந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பெற்றோரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ரத்து சரியல்ல

'மாணவர்களுக்கு அபாயம் ஏற்படுத்தும் இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம். ஆனால் மற்ற பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றால், மாணவர்கள் குஷி அடைவர். இது கல்வியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். கல்வி சுற்றுலாவை ரத்து செய்தது சரியல்ல' என, பெற்றோர் கூறுகின்றனர்.இதுகுறித்து, கல்வித்துறை கமிஷனர் திரிலோக் சந்திரா கூறியதாவது:தன் சுற்றறிக்கையில், சுற்றுலாவை ரத்து செய்யும்படி கல்வித்துறை கூறவே இல்லை. ஆனால் ரத்து செய்யும்படி உத்தரவிட்டதாக, போலியான சுற்றறிக்கை வெளியாகி உள்ளது. இது பள்ளி தலைமை ஆசிரியர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும்போது, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சுற்றுலா செல்லும் இடத்தில் பள்ளி ஊழியர், மாணவர்களுடன் இருப்பது கட்டாயம். எந்த அசம்பாவிதமாவது நடந்தால், பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது சுற்றுலா ஏற்பாட்டாளர் பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ