மாணவர்கள் நாட்டின் பிராண்ட் தூதர்களாக மாற வேண்டும்! மத்திய இணை அமைச்சர் பேச்சு
பாலக்காடு; மாணவர்கள் நாட்டின் 'பிராண்ட்' தூதர்களாக மாறி, வளர்ந்த இந்தியாவை வழிநடத்தும் திறன் கொண்டவர்களாக மாற வேண்டும், என, மத்திய மீன்வள துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தெரிவித்தார். கேரள மாநிலம், பாலக்காடு ஐ.ஐ.டி.யில் பி.எம். விகாஸ் திட்டத்தை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழா நடந்தது. மத்திய சிறுபான்மை விவகார செயலாளர் சந்திரசேகர் குமார், துணை செயலாளர் அங்கூர் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். பாலக்காடு ஐ.ஐ.டி. இயக்குனர் பேராசிரியர் சேஷாத்திரி சேகர், ஐ.சி.எஸ்.ஆர். டீன் அரவிந்த் ஆஜோய், ஐ.பி.டி.ஐ.எப். தலைமை நிர்வாக அதிகாரி சாயிஷாம் நாராயணன், பி.எம். விகாஸ் திட்ட பயனாளி மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். மத்திய மீன்வள இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் பேசியதாவது: மாணவர்கள் உள்ளூர் மக்களின் குரலாக இருக்க வேண்டும். உள்ளூர் வளர்ச்சி மற்றும் பொது மக்களின் மேம்பாட்டிற்காக மாணவர்கள் அவர்களது குரலாக மாற வேண்டும். சிறுபான்மை சமூகங்களின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்காக, மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பிரதமர் விகாஸ் திட்டம், மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும். மாணவர்கள் நாட்டின் 'பிராண்ட்' தூதர்களாக மாறி, வளர்ந்த இந்தியாவை வழிநடத்தும் திறன் கொண்டவர்களாக மாற வேண்டும். இவ்வாறு, பேசினார்.