இது போன்ற சம்பவம் நடந்தது இல்லை! மேல்சபை தலைவர் ஹொரட்டி வருத்தம்
பெங்களூரு: ''பெலகாவியின் சுவர்ண விதான்சவுதாவில், கூட்டத்தொடரின்போது மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் குறித்து, பா.ஜ., - எம்.எல்.சி., ரவி ஆபாச வார்த்தை பயன்படுத்தியது முடிந்த அத்தியாயம்,'' என, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி தெரிவித்தார்.பெங்களூரில் அவர் நேற்று அளித்த பேட்டி:ரவி மற்றும் லட்சுமி ஹெப்பால்கர் விவகாரம், முடிந்த அத்தியாயம். 19ம் தேதியன்றே, கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. சபைக்கு உள்ளே நடக்கும் சம்பவங்களில் போலீசார் தலையிட முடியாது.சம்பவம் குறித்து சபைக்குள் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என, போலீசார் என்னிடம் கேட்டனர். அதற்கு நான் அனுமதி அளிக்கவில்லை. நடவடிக்கை
சபைக்குள் நடந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து, விரிவாக விவாதித்தோம். சபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட பின், உறுப்பினர் ரவியை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு தரப்பில் இருந்தும், எனக்கு எந்த புகாரும் வரவில்லை. சபையில் உரிமை மீறப்பட்டதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.சபைக்கு பூட்டு போட்ட பின், வெளியே நடந்த சம்பவத்தில், நாங்கள் தலையிட முடியாது. ஆனால் அன்றைய தினம் நள்ளிரவு 1:00 மணி வரை, ரவியுடன் தொடர்பில் இருந்தேன். போலீஸ் கமிஷனருடன் போனில் பேசி, 'ரவிக்கு ஏதாவது நடந்தால் மவுனமாக இருக்கமாட்டோம். அவருக்கு அசம்பாவிதம் நடந்தால், நீங்களே பொறுப்பு' என, நேரடியாகவே எச்சரித்தேன். அவரை அழைத்துச் செல்லும் பாதையை, காலை வரை நான் 'டிராக்' செய்தேன். மூன்று முறை அவருடன் பேசினேன்.அதிகாலை 5:00 மணிக்கு எஸ்.பி.,யுடன் பேசினேன். ரவி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஏற்கனவே, போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். தடயவியல் ஆய்வகம்
லட்சுமி ஹெப்பால்கரை திட்டியது குறித்து மேல்சபை தலைவரிடம் கேள்வி எழுப்பும் அதிகாரம், மகளிர் ஆணையத்துக்கு இல்லை. ஆணையம் எனக்கு கடிதம் எழுதட்டும். அதற்கு நான் பதிலளிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. வேண்டுமானால் மற்றவருக்கு நோட்டீஸ் அளிக்கட்டும்.சம்பவம் குறித்து நாங்கள் பதிவு செய்த வீடியோ, ஆடியோ இருந்தால் பரிசீலிப்போம். வேறு யாராவது ஆடியோ, வீடியோ அனுப்பினால் அதன் உண்மை தன்மையை தெரிந்து கொள்ள, தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்புவோம். சபை முடிந்த பின் எந்த வீடியோவும் எடுக்கவில்லை.ரவியை 'என்கவுன்டர்' செய்ய முயற்சி நடந்ததாக, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து எனக்கு தெரியவில்லை. என்னிடம் புகார் வரவில்லை. அது அவரது தனிப்பட்ட கருத்து. ஆலோசனை
சபைக்குள் நடந்த சம்பவம் குறித்து, போலீசார் தலையிடக் கூடாது. அந்த அதிகாரம், உரிமை அவர்களுக்கு இல்லை. எப்.ஐ.ஆர்., பதிவாகியுள்ளது. போலீசாரின் சட்டங்கள் என்ன என்பது, எங்களுக்கு தெரியாது. தாக்குதல் நடத்த முயற்சித்தவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்கலாம்.ரவி, லட்சுமி ஹெப்பால்கர் இருவரையும் அழைத்துப் பேசினேன். இந்த விஷயத்தை இத்தோடு முடிக்கலாம் என, ஆலோசனை கூறினேன். இத்தனை ஆண்டுகள் அரசியல் வரலாற்றில், இது போன்ற சம்பவங்கள் நடந்தது இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.