தற்கொலைப்படை டிரோன்கள் ராணுவத்திடம் ஒப்படைப்பு!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, 480 நாகஸ்திரா டிரோன்கள், இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன.போர்களும், போர்க்களங்களும் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே இருக்கின்றன. வில் அம்பு ஏந்தி யானையில் சென்று போர் புரிந்தது அந்தக்காலம். இப்போது, உலகின் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு, இன்னொரு மூலையில் இருக்கும் இடத்தை குறி பார்த்து தாக்குவது நடந்து கொண்டிருக்கிறது.இந்தக்கால போர் முறைகள், தொழில்நுட்பங்களுக்கு தகுந்தபடி ஆயுதங்களை தயாரிக்க வேண்டியது அவசியமாகிறது. அதுவும், தாக்குதல் நடத்துபவருக்கு எந்த சேதமும் இல்லாமல், எதிரியை சர்வ நாசம் செய்கிற ஆயுதங்களுக்குத்தான் இப்போது சந்தையில் நல்ல மதிப்பு உள்ளது.அந்த வகையில் டிரோன்களை அனைத்து நாடுகளின் ராணுவங்களும் விரும்புகின்றன. அதுவும், ஆயுதங்களுடன் சென்று தற்கொலைப்படை போல தாக்குதல் நடத்தும் டிரோன்கள் இந்தக்கால போர்களில் முக்கியமாக கருதப்படுகின்றன.உலகளவில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் போர்களில் இந்த வகையிலான, தற்கொலைப்படை டிரோன்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகை டிரோன் இந்தியாவிலும் இப்போது தயார் செய்யப்பட்டுள்ளது.நாக்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சோலார் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம், வெடிமருந்துடன் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட தற்கொலை டிரோன்களை தயாரித்துள்ளது. நாகஸ்திரா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த டிரோன்கள், 75 சதவீதம் உள்நாட்டு மூலப்பொருட்கள், தொழில்நுட்பம் கொண்டு தயார் செய்யப்பட்டவை. மொத்தம் 480 டிரோன்கள் ராணுவத்தினர் வசம் இன்று ஒப்படைக்கப்பட்டன. இது உள் நாட்டு ஆயுத உற்பத்திக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.இது குறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:துல்லியமான தாக்குதல் திறன் மேம்படுத்தும் நோக்கில், இந்த நாகஸ்திரா 1 டிரோன்கள் தயார் செய்து வாங்கப்பட்டுள்ளன. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய இந்த டிரோன்கள், எளிதில் செல்லக்கூடியது மற்றும் பயன்படுத்த இலகுவானது.நாகஸ்திரா-2 மற்றும் நாகஸ்திரா-3 என பெயரிடப்பட்டுள்ள, மேம்படுத்தப்பட்ட டிரோன்களை தயாரிக்கும் முயற்சியில் அதே நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அந்த டிரோன்கள், ஏவுகணைகளை சுமந்து சென்று தாக்கும் வகையில் திறன் மேம்படுத்தப்பட்டதாக இருக்கும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.