உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடும்ப பிரச்னையை பேசி தீர்க்க ஐ.பி.எஸ்., அதிகாரி கணவருக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை

குடும்ப பிரச்னையை பேசி தீர்க்க ஐ.பி.எஸ்., அதிகாரி கணவருக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை

புதுடில்லி: 'சட்டத்தை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. உங்களுடைய குடும்ப பிரச்னையை பேசி தீர்க்க பாருங்கள்' என, ஐ.பி.எஸ்., அதிகாரியின் கணவருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.தொழிலதிபர் ஒருவருக்கும், அவரது மனைவியான ஐ.பி.எஸ்., அதிகாரிக்கும் இடையே குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டன; இதையடுத்து பிரிந்து வாழ்கின்றனர். இதற்கிடையே தன் கணவர், அவரது பெற்றோர் மீது, பெண் போலீஸ் அதிகாரி சில வழக்குகளை தொடர்ந்தார்.ஒரு வழக்கில், கணவரின் பெற்றோரை விடுவித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் 2022ல் அளித்த உத்தரவை எதிர்த்து, அந்த பெண் அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துஉள்ளார்.இந்த வழக்கு விசாரணையின்போது, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மாஷி, கே.வினோத் சந்திரன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளதாவது:பெண் போலீஸ் அதிகாரியான தன் மனைவி, தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பல வழக்குகளை தொடர்ந்துள்ளதாக கணவர் தரப்பில் கூறியுள்ளனர்.மேலும் தானும், தன் பெற்றோரும் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.பொய் தகவல்கள் கூறி, ஐ.பி.எஸ்., அதிகாரியாகி உள்ளதாகவும் கணவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இந்த வாதங்களை எல்லாம் பார்க்கும்போது, சமரசம் செய்து கொள்வதற்கு இருதரப்பும் தயாராக இல்லை என்றே தோன்றுகிறது.தான் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதை விட, மனைவியின் வேலையை பறிக்க வேண்டும் என்பதில் கணவர் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு தொடர்ந்து தொந்தரவு தருவார் என்று மனைவி மீது குற்றஞ்சாட்டுகிறார்.இது போன்ற அச்சம் தேவையில்லை. நம் நாட்டில் சட்டத்தை விட யாரும் உயர்ந்தவர்கள் இல்லை.தேவையான நிவாரணம் கிடைக்க வழி செய்யப்படும். முதலில் பிரச்னைகளை பேசி தீர்த்து, நிம்மதியாக வாழ பாருங்கள்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.இதையடுத்து, குடும்ப பிரச்னைகள் தொடர்பாக பேசி தீர்த்துக் கொள்ள தயாராக இருப்பதாக இருதரப்பும் அமர்வில் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை