கொடி கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவு; எதிர்த்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
'தமிழகம் முழுதும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்' என்ற, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரை பழங்காநத்தம் பஸ் நிலையத்திற்கு முன், தங்கள் கட்சியின் கொடிக்கம்பத்தை அமைக்க அனுமதி கேட்டு, கதிரவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதேபோல வேறு சில மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி அமர்வு, தமிழகம் முழுதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் ஊராட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள, அனைத்து அரசியல் கட்சிகள், ஜாதி அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக்கம்பங்களை அகற்ற ஜனவரியில் உத்தரவிட்டது. இது சம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்யும்படியும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அரசு தாக்கல் செய்த அறிக்கையில், மொத்தம், 19 மாவட்டங்களில் பொது இடங்களில் அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த, 100 சதவீத கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு விட்டதாக வும், 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், 90 சதவீத கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும் சென்னையில், 31 சதவீத கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையை முழுமையாக ஏற்க மறுத்த நீதிபதிகள் ஜூலை 24ம் தேதிக்குள் அனைத்து கொடிக்கம்பங்களையும் நீக்கவில்லை எனில், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்தனர். இதை எதிர்த்து மனுதாரர் கதிரவன், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு,நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பி த்த உத்தரவில், 'சென்னை உயர் நீதிமன்றம் அனைத்து தரப்பையும் முழுமையாக ஆராய்ந்து தான் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அரசின் இடத்தை தங்கள் அரசியல் லாபத்திற்காக அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதை பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க வேண்டுமா?' என, கேள்வி எழுப்பி யதுடன், மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர். -டில்லி சிறப்பு நிருபர்-