தெரு நாய்களை கையாளும் விதிமுறைகளை அரசு பின்பற்றவில்லை: சுப்ரீம் கோர்ட் வேதனை
தெரு நாய்களை கையாள வகுக்கப்பட்டு உள்ள விதிமுறைகளை அரசு பின்பற்றாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், முந்தைய உத்தரவை திரும்பப் பெற மறுத்துவிட்டது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் வெறி நாய்க்கடி மற்றும் அதனால், 'ரேபிஸ்' நோய் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருவது குறித்து நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து கடந்த வாரம் வழக்கு பதிவு செய்திருந்தது. உத்தரவு இரு தினங்களுக்கு முன் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, ஆர்.மஹாதேவன் அமர்வு, டில்லியில் சுற்றித்திரியும் அத்தனை தெரு நாய்களையும் அடுத்த எட்டு வாரத்திற்குள் பிடித்து, முறையான காப்பகம் அமைத்து பராமரிக்க உத்தரவிட்டது. மேலும், நாய்களுக்கு கருத்தடை செய்வது, தடுப்பூசி போடுவது உள்ளிட்டவற்றை டில்லி அரசு மற்றும் மாநகராட்சி மேற்கொள்ளவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக சிலர் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரிக்க, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. அப்போது, டில்லி அரசு தரப்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜென்ரல் துஷார் மேத்தா, ''நாட்டில், ஒரே நாளில், 10,000க்கும் மேற்பட் டோர் நாய்க்கடிக்கு ஆளாகி வருகின்றனர். ஒரு ஆண்டுக்கு, 20,000 பேர் வரை, தெருநாய்க்கடியால் உயிரிழப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ''பெரும்பாலும் குழந்தைகள்தான் தெரு நாய்களின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இங்கு யாரும் விலங்குகளை வெறுப்போர் அல்ல. அவற்றை கொல்ல வேண்டும் என சொல்லவில்லை. அவற்றை மனிதர்களிடமிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று தான் சொல்கிறோம்,'' என, வாதிட்டார். தடையில்லை மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், ''இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எதிர் தரப்பிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இவற்றைக் காப்பகங்களில் வைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்த காப்பகங்கள் எங்கே இருக்கின்றன,'' என்றார். இதன் பின் நீதிபதிகள் கூறியதாவது: இப்படி மேம்போக்கான வாதங்களை முன் வைக்காதீர்கள். இதற்கெல்லாம் உங்களிடம் ஆதாரங்கள் இருக்கிறதா? இருந்தால் அதை முன் வையுங்கள், நாங்கள் பரிசீலிக்கிறோம். தெரு நாய்களை கையாளும் நடைமுறைகள் குறித்து ஏற்கனவே தெளிவான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை பின்பற்றப்படவில்லை. அதனால் தான் இவ்வளவு பெரிய பிரச்னை. ஒரு பக்கம் தெருநாய்க்கடியால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இன்னொரு பக்கம் விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர். இது சிக்கலான விஷயம் தான். உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு எந்த இடைக்கால தடையும் விதிக்க முடியாது. இவ்வாறு கூறிய நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர் - டில்லி சிறப்பு நிருபர் -