உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் சொத்து பட்டியல் வெளியீடு!: நீதிமன்ற இணையதளத்தில் பார்க்கலாம்

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் சொத்து பட்டியல் வெளியீடு!: நீதிமன்ற இணையதளத்தில் பார்க்கலாம்

புதுடில்லி: நீதித்துறையின் மீதான வெளிப்படைத்தன்மை மற்றும் பொது மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்கான குறிப்பிடத்தக்க முயற்சியாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விபரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன.டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் நீதித்துறையின் மீது கரும்புள்ளியாக படிந்தது.பொதுமக்கள் மத்தியில் நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் அனைத்து நீதிபதிகளும் ஏப்., 1ல் கூடி விவாதித்தனர். அதில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விபரங்களை பொதுவெளியில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தின், 33 நீதிபதிகளில், 21 பேரின் சொத்து விபரங்கள் நீதிமன்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன. மற்றவர்களின் சொத்து விபரங்களும் படிப்படியாக வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.முன்னதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்து விபரங்களை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. ஆனால், அது பொதுவெளியில் வெளியிடப்படாமல் ரகசியம் காக்கப்படும். சில சந்தர்ப்பங்களில் நீதிபதிகள் தானாக முன்வந்து தங்கள் சொத்து விபரங்களை பொதுவெளியில் சமர்ப்பித்த சம்பவங்களும் உண்டு. ஆனால், அது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

யாருக்கு எவ்வளவு சொத்து?

 வரும், 13ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா டில்லியில் மூன்று படுக்கை அறை மற்றும், 2,446 சதுர அடியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பொது வைப்பு நிதியில், 1.06 கோடி ரூபாயும், அரசு ஊழியர்களுக்கான வைப்பு நிதியில், 1.77 கோடி ரூபாயும், நிரந்தர வைப்புத் தொகையாக 55.75 லட்சம் ரூபாயும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அடுத்த தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள நீதிபதி பி.ஆர்.கவாய், வங்கி கணக்கில், 19.63 லட்சம் ரூபாய் இருப்பு வைத்துள்ளார். மஹாராஷ்டிராவின் அமராவதியில் வீடு, மும்பை பாந்த்ரா மற்றும் டில்லி டிபன்ஸ் காலனியில் அடுக்குமாடி குடியிருப்புகள், அமராவதி மற்றும் நாக்பூரில் விவசாய நிலங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த நீதிபதி கே.வி.விஸ்வநாதன், 2023, மே 19ல் உச்ச நீதிமன்ற நீதிபதியானார். அதற்கு முன் உச்ச நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞராக பணியாற்றியவர். இவர், 120 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் மட்டுமே செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். டில்லியின் சப்தர்ஜங் மற்றும் குல்மோஹர் பூங்கா பகுதியில் அசையா சொத்துக்கள், தமிழகத்தின் கோவையில் அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

முதன்முறையாக...

நாடு முழுதும் உள்ள உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை, உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அரசு ஒப்புதல் பெற்றவர்கள் மட்டும் நீதிபதிகளாக நியமிக்கப்படுவர். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான இந்த கொலீஜியம் அளிக்கும் பரிந்துரை பட்டியல், இதுவரை பொதுவெளியில் வெளியிடப்பட்டதில்லை.நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக, 2022, நவ., 9 முதல், 2024, நவ., 10 வரையிலான காலகட்டத்தில், கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகள் பட்டியலை உச்ச நீதிமன்றம் நேற்று வெளியிட்டுள்ளது.எத்தனை பேருக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது, எத்தனை பெயர்கள் நிலுவையில் உள்ளன, பரிந்துரை பட்டியலில் இருந்தவர்களில் எத்தனை பேர் முன்னாள் மற்றும் இந்நாள் நீதிபதிகளின் உறவினர், பெண்கள், சிறுபான்மையினர் இடஒதுக்கீடு பெற்றவர்களின் விபரங்கள் ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

G. Lakshmi Narayanan
மே 11, 2025 00:08

இணைய அட்ரஸ் காட்டி இருக்கலாம். என்னை போல உள்ளவர்களுக்கு உதவும்.


madras
மே 07, 2025 17:06

இதல்லாம் நம்பர மாதிரியா இருக்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை