காங்., நிர்வாகிகள் மீது மேலிட தலைவர் அதிருப்தி
பெங்களூரு: இடைத்தேர்தல் பிரசாரம் உட்பட மற்ற பணிகள் தொடர்பாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுடன், முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும், காணொளி காட்சி வழியாக ஆலோசனை நடத்தினர்.பெங்களூரின், கிருஷ்ணா அலுவலகத்தில் முதல்வரும், துணை முதல்வரும், மூன்று தொகுதிகளின் இடைத்தேர்தல் குறித்து, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநில காங்., நிர்வாகிகளுடன் காணொளி காட்சி வழியாக, நேற்று காலை ஆலோசனை நடத்தினர்.முதல்வர் சித்தராமையா பேசியதாவது:ஷிகாவி, சண்டூர், சென்னப்பட்டணா தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில், ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். தொகுதி தலைவர்களுடன், ஒருங்கிணைந்து பிரசாரம் செய்ய வேண்டும்.மாநிலத்தில் நமது அரசு உள்ளது. மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இல்லையென்றால் மக்களுக்கு தவறான தகவல் செல்லும். அரசின் வாக்குறுதி திட்டங்கள், நல திட்டங்கள் குறித்து மக்களுக்கு தொகுதிகளில் பிரசாரம் செய்ய வேண்டும். எந்த அதிருப்தி, கருத்து வேறுபாடு இருந்தாலும், அதை ஓரங்கட்டி தொண்டர்ளை உற்சாகப்படுத்த வேண்டும். முடா, வால்மீகி மேம்பாட்டு ஆணைய பணம், தவறாக பயன்படுத்தப்பட்ட விஷயங்களை, எதிர்க்கட்சிகள் பிரசார அஸ்திரங்களாக பயன்படுத்துகின்றன. இவைகளுக்கு தக்க பதிலடி தர வேண்டும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அவரவர் தொகுதியில், கட்சி வேட்பாளருக்காக ஓட்டு கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:சென்னப்பட்டணா, ஷிகாவி, சண்டூர் இடைத்தேர்தலை முன்னிட்டு, எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சிக்கு ஒருவர் வீதம், அமைச்சர்களுக்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் கிராம பஞ்சாயத்துகளுக்கு சென்று, மக்களை சந்தித்து ஓட்டு சேகரிக்க வேண்டும். மூன்று தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.காணொளி காட்சியில் கர்நாடக காங்., பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, டில்லியில் இருந்து பங்கேற்றார். அப்போது அவர் அமைச்சர்களின் செயல் திறன் குறித்து, அதிருப்தி தெரிவித்தார்.பெரும்பாலான அமைச்சர்கள், காணொளி காட்சி ஆலோசனையில் பங்கேற்காததை கண்டித்தார். '3 தொகுதிகளின் இடைத்தேர்தலை தீவிரமாக கருதி, ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்' என, அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும் சுர்ஜேவாலா கட்டளையிட்டார்.