வாக்குறுதி திட்டத்துக்கு நிதி திரட்ட சுரங்க நில உரிமையாளர்களுக்கு வரி
இதுவரை சுரங்கத்தொழில் நடத்துவோரிடம், வரி வசூலித்த கர்நாடக அரசு, இனி சுரங்க நிலத்தின் உரிமையாளர்களுக்கும் வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக புதிய சட்டத்தை அமல்படுத்த தயாராகிறது.கர்நாடகாவில் இதுவரை, சுரங்க தொழில் நடத்துவோருக்கு, மாநில அரசு வரி விதித்து வந்தது. இனிமேல் சுரங்கத் தொழில் நடக்கும் நிலத்தின் உரிமையாளரிடமும் வரி விதிக்க, சமீபத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.சுரங்க நிலத்தில் எடுக்கப்படும் 1 டன் கனிமத்துக்கு தலா 100 ரூபாய் வசூலிக்கப்படும். இதனால், அரசுக்கு 11,128 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அரசுக்கு வருவாயை அதிகரிக்கும் நோக்கில், புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. வாக்குறுதி திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டதற்காக, சுரங்க நில உரிமையாளர்களிடம் வரி வசூலிக்க, அரசு நினைக்கவில்லை. வளர்ச்சி திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு கூறுகிறது.பெலகாவியில் நடக்கும் சட்டசபை கூட்டத்தில், கனிம உரிமைகள் வரி திருத்த மசோதா - 2024 தாக்கல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இம்மசோதாவில், மூன்றாண்டுக்கு ஒரு முறை வரியை அதிகரிக்கலாம் என்ற ஷரத்து கூறப்பட்டுள்ளது. நிலத்தில் சுரங்க தொழிலுக்கு வாய்ப்பளிக்கும் உரிமையாளர்கள், அந்த நிலத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு டன் கனிமத்துக்கு 100 ரூபாய் வரி செலுத்த வேண்டும். இதனால் நடப்பாண்டு 505.90 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என அரசு கருதுகிறது.சட்டவிரோதமாக சுரங்க தொழில் நடத்தியதால் விதிக்கப்பட்ட 6,105 கோடி ரூபாய் அபராதம் பாக்கியுள்ளது. இதை 'ஒன் டைம் செட்டில்மென்ட்' சலுகை மூலம் வசூலிக்க, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஒரே முறையில் வரி பாக்கியை செலுத்தினால், அபராதம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு நில உரிமையாளர்களிடையே எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போக போக தான் தெரியும். வளர்ச்சி திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு கூறினாலும், வாக்குறுதி திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டதற்காக, சுரங்க நில உரிமையாளர்களிடம் வரி வசூலிக்கவே, அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. - நமது நிருபர் -