எவரெஸ்ட் அடிவார முகாமுக்கு பைக்கில் சென்று வாலிபர் சாதனை
பாலக்காடு:எவரெஸ்ட் அடிவார முகாமுக்கு பைக்கில் சென்று, பாலக்காடு வாலிபர் சாதனை படைத்து உள்ளார். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், தேங்குறுச்சி பகுதியை சேர்ந்த மாதவன்- - சாந்தகுமாரி தம்பதியின் மகன் மிதுன் சாந்த், 26. கிராபிக் கலைஞரான இவர், எவரெஸ்ட் அடிவார முகாமுக்கு, பைக்கில் சென்று சாதனை படைத்துள்ளார். இவரது தாய் சாந்தகுமாரி கோங்காடு தொகுதி எம்.எல்.ஏ., சாதனை குறித்து மிதுன் சாந்த் கூறியதாவது: டில்லியில் இருந்து ஆறு பேர் குழுவுடன், பைக்கில் எவரெஸ்ட் அடிவார முகாமுக்கு, 15ம் தேதி புறப்பட்டேன். உம்லிங் லா கணவாய் சாலை, கடல் மட்டத்திலிருந்து 19,024 அடி உயரத்தில் உள்ளது. இது, போக்குவரத்துக்கு ஏற்றதாக இருந்தாலும், பயணம் மிகவும் ஆபத்தானது. கரடு, முரடான நிலப்பரப்பு, கடும் பனி மற்றும் பலத்த காற்று ஆகியவை அனைத்தும் சவால்கள் நிறைந்தவை. மிக குறைந்த ஆக்ஸிஜன் கொண்ட பகுதி. வெப்பநிலை 4 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக இருந்தது. எல்லாவற்றையும் எதிர் கொண்டு, 19ம் தேதி எவரெஸ்ட் அடிவார முகாம் சென்றடைந்தோம். பனி மலைகள் வழியாக பயணிக்க டில்லியில் சிறப்புப் பயிற்சி பெற்றிருந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.