உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாத சம்பளம் ரூ.1.25 லட்சம்; சொத்தோ 100 கோடி ரூபாய்! மிரள வைத்த தெலுங்கானா அதிகாரி

மாத சம்பளம் ரூ.1.25 லட்சம்; சொத்தோ 100 கோடி ரூபாய்! மிரள வைத்த தெலுங்கானா அதிகாரி

ஹைதராபாத்: தெலுங்கானாவில், வருமானத்துக்கு அதிகமாக முறைகேடாக, 100 கோடி ரூபாய் சொத்து குவித்த புகாரில், மஹபூப் நகர் மாவட்ட துணை போக்குவரத்து கமிஷனர் மூட் கிஷன் மீது, மாநில ஊழல் தடுப்பு பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மஹபூப் நகர் மாவட்டத்தில், துணை போக்குவரத்து கமிஷனராக மூட் கிஷன் என்பவர் பணியாற்றுகிறார். இவர், வருமானத்துக்கு அதிகமாக முறைகேடாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக மாநில ஊழல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, துணை போக்குவரத்து கமிஷனர் மூட் கிஷனுக்கு சொந்தமான வீடுகளில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சமீபத்தில் சோதனை நடத்தினர். இதே போல், அவரது நெருங்கிய கூட்டாளிகள் வீடுகளிலும் சோதனை நடந்தது. அப்போது, அவருக்கு சொந்தமான, 12.72 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால், அவரிடம் உள்ள நிலங்கள் மற்றும் வணிக முதலீடுகளின் தற்போதைய சந்தை மதிப்பை கணக்கிட்டால், அது, 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என, கூறப்படுகிறது. துணை போக்குவரத்து கமிஷனரின் மாத சம்பளம், 1 லட்சம் - 1.25 லட்சம் ரூபாய். அப்படியிருக்கையில், மூட் கிஷனின் சொத்து மதிப்பு, 100 கோடி ரூபாய்க்கும் மேல் இருப்பது அதிகாரிகளை மிரள வைத்துள்ளது. சங்காரெட்டி மாவட்டத்தில், அவருக்கு, 31 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதன் சந்தை மதிப்பு மட்டுமே, 62 கோடி ரூபாய். நிஜாமாபாத் நகராட்சி எல்லைக்குள், 10 ஏக்கர் வணிக நிலமும் உள்ளது. தவிர, 'லஹரி இன்டர்நேஷனல்' ஹோட்டலில், 50 சதவீத பங்கும், நிஜாமாபாதில், பிரீமியம் பர்னிச்சர் ஷோரூமும் வைத்துள்ளார். மூட் கிஷனின் வங்கிக் கணக்குகளில் இருந்த, 1.37 கோடி ரூபாய் ரொக்கம், 1 கிலோவுக்கும் அதிகமான தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மேலும், 'இன்னோவா கிரிஸ்டா, ஹோண்டா சிட்டி' உள்ளிட்ட கார்கள், இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளும் முடக்கப்பட்டுள்ளன. அரசுப் பணியில் இருந்தபடியே, ஹோட்டல்கள் மற்றும் வணிக வளாகங்கள் என, ஒரு நிழல் சாம்ராஜ்யத்தையே மூட் கிஷன் உருவாக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, அவர் மீது மாநில ஊழல் தடுப்புப் பிரிவினர் வழக்குப் பதிந்துள்ளனர். இதனால், அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என, கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி