| ADDED : நவ 13, 2025 01:21 PM
ஸ்ரீநகர்: டில்லி கார் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் 3வது நாளாக போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர்.டில்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக காஷ்மீர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்த அதீல் மற்றும் முசம்மில் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றிய மற்றொரு டாக்டரான உமரும் காஷ்மீரில் பணியாற்றி வந்துள்ளான். இவர்கள் பணியாற்றி வந்த மருத்துவமனை மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும், வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இடங்களில் ஜம்மு காஷ்மீர் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த இரு தினங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், 3வது நாளாக ஜம்மு காஷ்மீர் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்பான ஜமாத் இ இஸ்லாமி மற்றும் ஜேகேஎன்ஓபி அமைப்புகளுடன் தொடர்புடைய சுமார் 13 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இதனால், ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு நிலவி வருகிறது.