ஜவுளிக்கடையில் தீ துணிகள் சாம்பல்
புதுடில்லி: ஜவுளிக்கடை மற்றும் அதன் கிடங்கில் இன்று (நவ.,29) மதியம் தீப்பற்றி எரிந்து சாம்பலானது. கிழக்கு டில்லி காந்தி நகர் மார்க்கெட்டில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் இன்று மதியம், 2:00 மணிக்கு தீப்பற்றியது. கடை முழுதும் மளமளவென பரவிய தீ, மேல் தளத்தில் இருந்த கிடங்குக்கும் பரவியது. இரண்டு தளங்களிலும் இருந்த துணிகள் கொழுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்து கீதா காலனி போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் வந்தனர். இரண்டு மணி நேரம் போராடி மாலை, 4:00 மணிக்கு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், கடை மற்றும் கிடங்கில் இருந்த துணிகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. சேத மதிப்பு கணக்கிடும் பணி நடக்கிறது. தீப்பற்றியதற்கான காரணம் குறித்து, தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.