நீர்த்தேக்கத்தில் மூழ்கி சிறுவன் பலி
மூணாறு:கட்டப்பனை அருகே ஓணம் பண்டிகை விடுமுறையை கொண்டாட தாத்தா, பாட்டி வீட்டிற்கு வந்த இரண்டு சிறுவர்கள் இரட்டையாறு நீர் தேக்கத்தில் மூழ்கினர். அதில் ஒருவர் உடல் மீட்கப்பட்ட நிலையில் ஒருவரை தேடி வருகின்றனர்.கேரளா இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே இரட்டையாறு பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு காயங்குளத்தில் வசிக்கும் ரஜிதா, மற்றும் உப்புத்தரா பகுதியில் வசிக்கும் சகோதரர் ரதீஷ் ஆகியோர் ஓணம் பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் வந்தனர்.பொன்னப்பன்- ரஜிதா தம்பதியினர் மகன்கள் அனுஹர்ஷன், அதுல்ஹர்ஸ் 12, மற்றும் ரதீஷ்- சவுமியா தம்பதியினரின் மகன்கள் ஆதித்தியன், அசவுரேஷ் 12, ஆகியோர் நேற்று காலை இரட்டையாறு அணை நீர் தேக்கப் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தனர்.அப்போது அவர்கள் விளையாடிய பந்து நீர் தேக்கத்தில் விழுந்ததால், அதனை எடுக்க முயன்றபோது அதுல்ஹர்ஸ், அசவுரேஷ் ஆகியோர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அது குறித்து இருவரின் சகோதரர்களும் தகவல் அளித்தனர். பொது மக்கள் நீர் தேக்கத்தில் தேடி அதுல்ஹர்ஸ் உடலை மீட்டனர். தண்ணீரில் மாயமான அசவுரேஷை போலீசார், தீயணைப்பு துறையினர் தேடினர்.