உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக கவர்னர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக முதல்வர் வழக்கு! தன் மீதான விசாரணைக்கு தடை கோரி சித்தராமையா மனு

கர்நாடக கவர்னர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக முதல்வர் வழக்கு! தன் மீதான விசாரணைக்கு தடை கோரி சித்தராமையா மனு

பெங்களூரு : 'மூடா' முறைகேடு வழக்கில், தன் மீது விசாரணை நடத்த கவர்னர் அளித்த அனுமதிக்கு தடை கோரி, முதல்வர் சித்தராமையா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், 'ரிட்' மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி நாகபிரசன்னா, வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையை ஒத்திவைக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.'மூடா' முறைகேடு குறித்து, முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், இம்மாதம் 17ம் தேதி அனுமதி அளித்தார். இந்த அனுமதியை ரத்து செய்ய உத்தரவிடும்படி வலியுறுத்தி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று, முதல்வர் தரப்பில், 'ரிட்' மனு தாக்கல் செய்யப்பட்டது.இம்மனுவை, நேற்றே அவசர வழக்காக கருதி விசாரிக்கும்படி முதல்வர் தரப்பில் கோரப்பட்டது. இதன்படி, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில், நேற்று மதியம் 2:30 மணிக்கு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.

முதல்வர் பதில்

முதல்வர் தரப்பில், ஆஜரான உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதாடியதாவது:முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் 17 ஏ பிரிவின் கீழும்; பி.என்.எஸ்.எஸ்., சட்டப்பிரிவு 218 படியும் விசாரணை நடத்தும்படி கவர்னர் அனுமதி அளித்துள்ளார்.இதை பார்க்கும் போது, மேலோட்டத்துக்கு கவர்னர் தனிச்சையாக முடிவு எடுத்துள்ளார். ஆபிரகாம் என்பவர், ஜூலை 26ம் தேதி, முதல்வர் மீது விசாரணை நடத்த அனுமதி கோரி, கவர்னரிடம் மனு அளித்துள்ளார்.அதே நாளில், தலைமை செயலர், அரசு தரப்பில் பதில் அளித்துள்ளார். இதை பரிசீலனை செய்யாமல், ஆபிரகாம் புகார் அளித்த அதே நாளில், விளக்கம் அளிக்கும்படி முதல்வருக்கு கவர்னர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.இந்த நோட்டீசை திரும்ப பெறும்படி, அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கவர்னரின் நோட்டீசுக்கு, முதல்வரும் தனியாக பதில் அளித்துள்ளார்.

முதல்வருக்கு நோட்டீஸ்

பல ஆண்டுகளாக, வெவ்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மீது விசாரணை நடத்த அனுமதி கோரிய மனுக்கள், கவர்னரிடம் அப்படியே உள்ளன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காமல், முதல்வர் மனு மீது மட்டும் அவசரமாக நடவடிக்கை எடுத்துள்ளார்.கவர்னர் அளித்துள்ள அனுமதியின் சட்ட பிரிவு, இந்த வழக்கிற்கு பொருந்தாது. முதல்வருக்கு அனுப்பிய நோட்டீசில் ஆபிரகாம் பெயர் மட்டுமே இருந்தது. ஆனால், அனுமதி அளித்த கடிதத்தில், ஆபிரகாம், பிரதீப்குமார், ஸ்நேஹமயி கிருஷ்ணா ஆகிய மூவர் பெயர்கள் உள்ளன.மற்ற இருவர் அளித்த புகாருக்கு, முதல்வருக்கு நோட்டீஸ் வழங்கவில்லை. இந்த மனுக்கள் மீது பதில் அளிக்க முதல்வருக்கு வாய்ப்பு தராமல், கவர்னர் தனிச்சையாகவும், பாரபட்சமாகவும் செயல்பட்டுள்ளார்.மத்திய பிரதேச சிறப்பு காவல் பிரிவு மற்றும் மத்திய பிரதேச அரசு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில், கவர்னரின் செயல்பாடு, தன் விருப்பத்துக்கு இல்லாமல், சட்ட கோட்பாடுகளின் வரம்புக்குள் இருக்க வேண்டும். இல்லை என்றால் சட்டத்துக்கு தீங்கு இழைக்கும், என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

சீர்குலைப்பு

கவர்னர் அனுமதி அளித்ததன் பின்னணியில், சிலரின் அரசியல் உள்நோக்கம் உள்ளது. அரசை சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார். நல்லாட்சிக்கான நோக்கம் இதில் இல்லை.முதல்வரின் மனைவிக்கு சொந்தமான, 1,48,104 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி கொண்ட, மைசூரு மேம்பாட்டு ஆணையம், வெறும் 38,284 சதுர அடி நிலத்தை, 14 மனைகளாக கொடுத்துள்ளது. இதில், முதல்வர் முறைகேடு செய்ததற்கான ஒரு ஆதாரமும் இல்லை.ஆபிரகாம், பல்வேறு தரப்பினரை மிரட்டி பணம் பறித்துள்ளார். அவரது நடத்தை குறித்து, உச்ச நீதிமன்றமும் கண்டித்துள்ளது. அவர் பொதுநல வழக்கை தவறாக பயன்படுத்தி கொண்டதற்காக, 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.எனவே, முதல்வர் மீது விசாரணை நடத்த அளித்த அனுமதியை திரும்ப பெறும்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், ஆக., 20ம் தேதி, (இன்று) மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், ஸ்நேமயி கிருஷ்ணா தொடர்ந்த வழக்கு மீது உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. அதற்கும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வாதாடினார்.

எந்த மனுவும் இல்லை

கவர்னர் தரப்பில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டில்லியில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராகி வாதாடியதாவது:வெவ்வேறு அரசியல் தலைவர்கள் மீது விசாரணை நடத்த அனுமதி கோரிய எந்த மனுவும், கவர்னரிடம் இல்லை. இது தொடர்பாக அனைத்து ஆவணங்களும், முதல்வர் மீதான குற்றச்சாட்டுக்கு உள்ள ஆதாரங்களும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.போதிய ஆதாரங்கள் இருப்பதால் தான் முதல்வர் மீது விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. எனவே கவர்னரின் உத்தரவுக்கு தடை விதிக்க கூடாது. எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க கூடாது.இவ்வாறு அவர் வாதாடினார்.

கேவியட்' மனு

'முதல்வர் வழக்கு தொடர்ந்தால், தன் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும்' என்று, சமூக ஆர்வலர் பிரதீப் குமார், முன்னதாகவே கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார்.நேற்றைய விசாரணையின் போது, அவரது தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரபுலிங்க நாவடகி வாதாடுகையில், ''முதல்வர் மீது விசாரணை நடத்த கவர்னர் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க கூடாது. அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும்,'' என்றார்.மாநில அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி, ஆபிரகாம் தரப்பில் வழக்கறிஞர் ரங்கநாத், ஸ்நேமயி கிருஷ்ணா தரப்பில் வழக்கறிஞர் வசந்த்குமார் ஆகியோர் வாதாடினர்.

இடைக்கால உத்தரவு

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி நாகபிரசன்னா, ''இவ்வழக்கு வரும் 29ம் தேதி மதியம் 2:30 மணிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அதுவரை மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம், உத்தரவை ஒத்திவைக்க வேண்டும். எதிர்மனுதாரர்களுக்கு விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்படும்,'' என, இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.நேற்று மாலை, தன் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்களுடன், முதல்வர் ஆலோசனை நடத்தினார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், முதல்வர் சித்தராமையாவுக்கு, தற்காலிக நிம்மதி கிடைத்து உள்ளது.பணிவுடன் ஏற்கிறேன்!முதல்வர் சித்தராமையா, 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கை:அரசியல் அமைப்பு மற்றும் நீதி மீது அதீத நம்பிக்கை கொண்டவன். இந்த மண்ணின் சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற முறையில், அரசியல் உள்நோக்கம் கொண்ட கவர்னரின் முடிவுக்கு எதிராக, பொய் வழக்கில் என் மீது விசாரணை நடத்த அனுமதித்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை நாடி உள்ளேன்.என் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணையை ஒத்திவைக்கும்படியும், அசவர முடிவுகளை எடுக்க கூடாது என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்துஉள்ளது.நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பணிவுடன் ஏற்று, நன்றி தெரிவித்து கொள்கிறேன். இறுதி வெற்றியும் சத்தியத்துக்காக தான் இருக்கும் என்று நம்புகிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை