அய்யப்பனுக்கு தங்க அங்கி ஆரன்முளாவிலிருந்து புறப்பட்டது
சபரிமலை : கடந்த 1973ல் திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா அய்யப்பசுவாமிக்கு 420 சவரன் எடை கொண்ட தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார். இது ஆரன்முளா பார்த்தசாரதி கோவில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அங்கி அணிவித்து தான் அய்யப்பனுக்கு மண்டல பூஜை நடக்கும்.டிச., 26 மதியம் 12:00 மணிக்கு சபரிமலையில் மண்டல பூஜை நடக்கிறது. இதற்காக நேற்று ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து தங்க அங்கி பவனி புறப்பட்டது. அதிகாலை 5:00 மணி முதல் கோவில் முன்புறம் இந்த அங்கி பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.பிறகு காலை 6:00 மணிக்கு அங்கி எடுத்து வரப்பட்டு சபரிமலை கோவில் மாதிரியில் வடிவமைக்கப்பட்டிருந்த ரதத்தில் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டது. நேற்று ஓமல்லுார் ரத்தகண்ட சுவாமி கோவிலில் தங்கிய பவனி, இன்று கோந்நி முருங்கமங்கலம் கோவிலிலும், நாளை பெருநாடு சாஸ்தா கோவிலிலும் தங்கும் பவனி டிச., 25 மதியம் பம்பை வந்தடையும். அங்கு பம்பை கணபதி கோவில் முன் பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்பட்ட பின் மதியம் 3:00 மணிக்கு தலைசுமையாக சன்னிதானம் கொண்டு வரப்பட்டு ஸ்ரீகோவிலில் ஒப்படைக்கப்படும். தொடர்ந்து மாலை 6:30 மணி-க்கு அய்யப்பன் விக்ரகத்துக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடக்கும்.டிச., 26 மதியம் 12:00 மணிக்கு அய்யப்பன் விக்ரகத்தில் மீண்டும் தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நடக்கும். இரவு 11:00 மணிக்கு நடை அடைப்பதுடன் இந்தாண்டுக்கான மண்டல காலம் சபரிமலையில் நிறைவு பெறும்.