உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வருங்கால மனைவியை கொலை செய்தவர் கைது

வருங்கால மனைவியை கொலை செய்தவர் கைது

மைசூரு : திருமணம் செய்யவிருந்த இளம்பெண்ணை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.மைசூரு, ஹெச்.டி.கோட்டே ஹிரேஹள்ளி கிராமத்தில் வசிக்கும் புட்டசாமப்பா, சிவ நஞ்சம்மா தம்பதி மகள் கவிதா 20. இவருக்கும், பூதனுார் கிராமத்தை சேர்ந்த புட்டப்பா மகன் நிரஞ்சன், 25, என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன், திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.இம்மாதம் 21ம் தேதி, திருமணம் நடக்க இருந்தது. நிரஞ்சன் அவ்வப்போது கவிதாவின் வீட்டுக்கு வந்து செல்வார். இம்மாதம் 4ம் தேதி மாலை, கவிதாவின் பெற்றோர் வயலுக்கு சென்றிருந்தனர். கவிதா தனியாக வீட்டில் இருந்தார்.பெற்றோர் வீடு திரும்பிய போது, கதவு உட்புறம் தாழிடப்பட்டிருந்தது. பலமுறை கதவை தட்டியும் திறக்கவில்லை. அதன்பின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கவிதா துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தது தெரிந்தது.அதிர்ச்சி அடைந்த பெற்றோர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், கவிதா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.விசாரணை நடத்திய போது, நிரஞ்சனே தங்கள் மகளை கொலை செய்திருக்க வேண்டும் என, கவிதாவின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பின் போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர். நிரஞ்சனை விசாரித்த போது, கொலை செய்யவில்லை என, கூறினார்.ஆனால் அக்கம், பக்கத்தினரிடம் விசாரித்த போது, சம்பவத்தன்று நிரஞ்சன், கவிதா வீட்டின் மேற்கூரையை பிரித்து கொண்டு, வெளியே வந்து சுவரை தாண்டி குதித்து சென்றதை பார்த்ததாக கூறினர். பிரேத பரிசோதனை அறிக்கையிலும், கழுத்தை நெரித்து கவிதா கொலை செய்யப்பட்டது தெரிந்தது.அதன்பின் நிரஞ்சனை விசாரித்த போது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சம்பவம் நடந்த நாளன்று கவிதா வீட்டுக்கு நிரஞ்சன் சென்றார். ஆரம்பத்தில் நன்றாக பேசினர். அதன்பின் ஏதோ காரணத்தால் வாக்குவாதம் நடந்தது. கோபத்தில் கழுத்தை நெரித்து, கவிதாவை கொலை செய்த பின், கதவை உட்புறமாக தாளிட்டுவிட்டு, மேற்கூரை வழியாக தப்பியதாக கூறினார். நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ