உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீதைக்கு இருக்கும் ஒரே கோவில்

சீதைக்கு இருக்கும் ஒரே கோவில்

கர்நாடகாவில் வரலாற்று பிரசித்தி பெற்ற, புராதனமான கோவில்கள் ஏராளமாக உள்ளன. இவற்றில் பாகல்கோட்டில் உள்ள சீதை கோவிலும் ஒன்றாகும். இக்கோவில் தான், இந்தியாவில் சீதைக்கு உள்ள ஒரே கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.உத்தரபிரதேசம், அயோத்தியில் ராமர் கோவில் ஜனவரி 22ல், திறக்கப்படுகிறது. கர்ப்பகுடியில் ராமர் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த நொடிக்காக ஹிந்துக்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இத்தகைய நிலையில், ராமர், சீதை சம்பந்தப்பட்ட கோவில்கள், அடையாளங்கள் நாடு முழுதும் உள்ளன. கர்நாடகாவிலும், இது போன்ற அடையாளங்கள் உள்ளன.பாகல்கோட்டின், சீதமனே கிராமத்தில் சீதை கோவில் உள்ளது. இங்குள்ள இரண்டு சீதை விக்ரகத்துக்கு, தினமும் பூஜை நடக்கின்றன. கோவிலின் வெளியே லவன் குஷன் குளித்த இடங்கள் உள்ளன. லவகுஷா பூங்கா, மகரிஷி வால்மீகியின் குடில் உள்ளன. நாட்டில் சீதைக்கென்றே உள்ள தனி கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது.ராமனால் வனத்துக்கு அனுப்பப்பட்ட சீதை, கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள வால்மீகி மகரிஷி ஆஸ்ரமத்தில் அடைக்கலம் பெற்றார். இதே இடத்தில் லவன், குஷனை பெற்றெடுத்ததாக ஐதீகம் உள்ளது.சீதைக்கு பிரசவம் நடந்த அறை, லவன், குஷன் குளித்த குளம் உள்ளன. சீதைக்கு பிரசவம் நடந்த போது, ஆற்றுக்கு சென்று தண்ணீர் கொண்டு வர முடியவில்லை. எனவே வால்மீகி மகரிஷி, தன் தவ வலிமையால், சீதைக்காக குளம் உருவாக்கினார். இந்த இடங்கள் ராமாயண காவியத்துக்கு, சாட்சியாக அமைந்துள்ளன.ராவணன், சீதையை கடத்தி செல்லும் போது, சீதை தன் தாலியில் இருந்த கருமணிகளை, அந்த இடத்தில் வீசி எறிந்தாராம். அன்று முதல் இந்த கிராமத்துக்கு சீதேமணி என்ற பெயர் வந்துள்ளது. நாளடைவில் சீதெமனே என்றானது. சீதைக்கு வீரசைவ லிங்காயத் சமுதாயத்தின் ஹிரேமட் சுவாமிகள் பூஜை செய்கிறார். சீதையின் கழுத்தில் லிங்கம் கட்டப்பட்டுள்ளது.திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத தம்பதி, சீதை கோவிலுக்கு வந்து தொட்டில் கட்டி, லவன், குஷனை போன்று குழந்தைகள் பிறக்க வேண்டும் என, பிரார்த்தனை செய்கின்றனர். கோவில் பக்கத்தில் சீதை குளம் உள்ளது. இது எப்போதும் வற்றியதே இல்லை. இதை பக்தர்கள் புனித தீர்த்தமாக பெறுகின்றனர்.சீதை கோவிலுக்கு பக்தர்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணியரும் அதிகமாக வருகின்றனர். இவர்களை ஈர்க்கும் நோக்கில். சுற்றுலாத்துறை லவகுஷா பூங்கா அமைத்துள்ளது. இதில், ராமாயண காவியத்தை கண் முன்னே கொண்டு வந்துள்ளனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ