உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாதியில் நின்ற முதல்வர் கான்வாய் பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு சிக்கல்

பாதியில் நின்ற முதல்வர் கான்வாய் பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு சிக்கல்

போபால்: மத்திய பிரதேசத்தில், முதல்வரின் கான்வாய் பழுதாகி நின்ற சம்பவம் தொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ரட்லம் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில், முதல்வர் மோகன் யாதவின் கான்வாய்கள், கடந்த 26ம் தேதி பெட்ரோல் நிரப்பின. அதன்பின் சில நிமிடங்களில் முதல்வருடன் செல்லும்போது அந்த வாகனங்கள் அடுத்தடுத்து பழுதாகி நின்றன. இதையடுத்து, மாற்று வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தும்படி மாநில நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் கோவிந்த் சிங் ராஜ்புத், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன், சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க்கில் ஆய்வு நடத்தும்படியும் அறிவுறுத்தினார். இதற்கிடையே, கான்வாய்களுக்கு கலப்பட பெட்ரோல் நிரப்பியதே காரணம் என விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடத்தும்படி பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கும் மாநில அரசு உத்தரவிட்டது. இதன்படி அந்நிறுவனம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பெட்ரோல் பங்க் அமைந்துள்ள பகுதியில் கனமழை பெய்ததால், டீசல் டேங்கில் மழைநீர் கலந்ததே கலப்படத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.எனினும், அனைத்து பங்க்கிலும், பெட்ரோல் மற்றும் டீசல் மாதிரிகள் எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகள் வந்தபின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !