உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெள்ளியை அள்ளிய டிரக் ஓட்டுநர் மகன்

வெள்ளியை அள்ளிய டிரக் ஓட்டுநர் மகன்

உடுப்பி மாவட்டம், வண்ட்சே கிராமத்தை சேர்ந்த குருராஜா பூஜாரி, 1992ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை மஹாபாலா பூஜாரி, டிரக் ஓட்டுநராக உள்ளார். குருராஜா உடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரர்கள். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்.உடுப்பியில் உள்ள மூகாம்பிகா உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளியில் படிக்கும் போது, 2008ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில், டில்லியை சேர்ந்த சுஷில் குமார், வெண்கல பதக்கம் வென்றார். இதுவே, குருராஜாவுக்கு பளு துாக்கும் போட்டியில் பங்கேற்க துாண்டுகோலாக அமைந்தது.

பட்டம்

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் 2015ல் தேசிய பளு துாக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றதுடன், 'அனைத்திந்திய பல்கலைக்கழக' பட்டத்தையும் பெற்றார்.அசாம் மாநிலம், கவுஹாத்தியில் 2016ல் நடந்த தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியில், 56 கிலோ பிரிவில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்று, முதல் சர்வதேச பதக்க வேட்டையை துவக்கினார். தொடர்ந்து, மலேஷியாவின் பினாங்கில் நடந்த பளு துாக்குதலுக்கான காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் 56 கிலோ எடை பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்றார்.ஆஸ்திரேலியாவில் 2017ல் நடந்த பளு துாக்குதலுக்கான காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில், வெண்கல பதக்கம் வென்றார். 2018 ஆஸ்திரேலியாவில் நடந்த 'காமன்வெல்த் விளையாட்டு போட்டி'யில், 56 கிலோ பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

பிரிவு மாற்றம்

அதை தொடர்ந்து எடை பிரிவை மாற்ற வேண்டும் என்று நினைத்த குருராஜா, தனது 29வது வயதில், 61 கிலோ பிரிவில் கவனம் செலுத்த துவங்கினார். அதன்பின், 2021ல் பயிற்சி முகாமில் பங்கேற்றதால், சர்வதேச போட்டிகளில் இடம் பிடித்தார். இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் 2022ல் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், 61 கிலோ பிரிவில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் பெற்றுத் தந்தார். குருராஜா பூஜாரி கூறியதாவது: ஆரம்பத்தில் 56 கிலோ எடை பிரிவில் இருந்தபோது, பலமுறை காயங்கள் ஏற்பட்டன. எனவே தான் 61 கிலோ பிரிவில் சேர்ந்தேன். அப்போதும் தேசிய அளவில் ஒன்றிரண்டு ஆண்டுகள் மட்டுமே பங்கேற்றேன். அதன்பின் சர்வதேச போட்டிகளில் விளையாட, பயிற்சி முகாமில் பங்கேற்றேன். இதற்காக, ஓராண்டு வீட்டுக்கு செல்லாமல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். பல வலிகளை கடந்து தான், இந்த உயரத்துக்கு வளர்ந்துள்ளேன்.தற்போது எந்தவித காயமும் இன்றி 61 கிலோ எடை பிரிவில் சிறப்பாக செயல்பட முடிந்தது. போட்டியில் பதக்கம் வெல்ல துாண்டுதலாக இருந்தது, எனது பயிற்சியாளர் தான். அவர் தான், 'நீ சரியாக பளுவை துாக்கினால் நம் நாட்டுக்கு பதக்கம் கிடைக்கும்' என்றார். அவரது பேச்சு எனக்கு உத்வேகத்தை அளித்தது. இதனால் பதக்கம் வெல்ல முடிந்தது.இவ்வாறு அவர் கூறினார்.ராணுவத்தில் சேவை செய்ய வேண்டும் என்று நினைத்த குருராஜா, தற்போது நாட்டின் விமானப்படை வீரராக இருக்கிறார் -- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை