உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுளலிதம் எளிய பாடல் தொடர் 2,000 அத்தியாயம் தாண்டியது

சுளலிதம் எளிய பாடல் தொடர் 2,000 அத்தியாயம் தாண்டியது

பாலக்காடு; மிருதங்க வித்வான், குழல்மன்னம் ராமகிருஷ்ணன் தினமும் ஒளிபரப்பு செய்யும் எளிய பாடல் தொடரான 'சுளலிதம்' நேற்று இரண்டாயிரம் பாடல்களை பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளது. கேரளா மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் பிரபல மிருதங்க வித்வான், குழல்மன்னம் ராமகிருஷ்ணன். இவர், கொரோனா காலத்தில் 'சுளலிதம்' என்ற பெயரில் எளிய பாடல் தொடரை ஆரம்பித்தார். தினமும் தான் எழுதிய வரிகளுக்கு இசையமைத்து, அதை சமூக ஊடகம் வாயிலாக வெளியிட்டு வருகிறார். இதற்கு இசை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. உள்ளூர், வெளியூர் இசை கலைஞர்களை பங்கேற்க வைத்து எளிய பாடல் தொடர் ஒளிபரப்பினார். தற்போது, இரண்டாயிரம் அத்தியாயங்களை பூர்த்தி செய்துள்ளது. இது குறித்து, குழல்மன்னம் ராமகிருஷ்ணன் கூறியதாவது: 'சுளலிதம்' என்ற எளிய பாடல் தொடர், இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. மூன்று வயதுள்ள நியா முதல், பிரபல இசைக்கலைஞர் ஜெயன் உட்பட இந்தத் தொடரில் பாடி உள்ளனர். 2020 ஏப்., 19ல் இந்த எளிய பாடல் தொடர் பயணம் துவங்கியது. தற்போது ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 'சென்டர் ஆப் மியூசிக் அண்ட் ஆர்ட்ஸ்' என்ற 'யுடியூப்' சேனல் வாயிலாக ஒளிபரப்புகிறேன். பாட்டு எழுதி, அதை மொபைல்போன் வாயிலாக திருத்தம் செய்து, பாடகரை அறிமுகப்படுத்தும் முன்னுரையோடு பாடல் ஒளிபரப்பாகிறது. சமூக நீதி மற்றும் இயற்கையை மையப்படுத்திய பாடல்களுக்கு ஏராளமான பாராட்டுக்கள் கிடைத்துள்ளன. தற்போது, இரண்டாயிரம் பாடல்கள் பூர்த்தி செய்யும் இந்தத் தொடரில், நேற்று இசையமைப்பாளர் சரத் பாடியுள்ளார். தொடரின் வெற்றியை எளிய முறையில் கொண்டாட உள்ளேன். 'லாளித்தியம்' என்ற தலைப்பில், 11 நாட்கள் ஆன்லைனில் இசை நிகழ்ச்சிகளாக கொண்டாட உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ