இலகு ரக வாகன லைசென்ஸ் இருந்தால் ஏழரை டன் வாகனத்தை இயக்கலாம் உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவு
புதுடில்லி, 'இலகு ரக மோட்டார் வாகனம் இயக்குவதற்கான, 'டிரைவிங் லைசென்ஸ்' வைத்துள்ளவர்கள், 7,50-0 கிலோ வரையிலான எடையுள்ள இலகு ரக மோட்டார் வாகன பிரிவில் உள்ள வர்த்தக பயன்பாட்டு வாகனத்தை ஓட்டலாம்' என, உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கு ஏற்ப, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், டிரைவிங் லைசென்ஸ் எனப்படும் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது.கடந்த 2017ல் உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் அளித்த தீர்ப்பில், 7,500 கிலோ வரை எடையுள்ள போக்குவரத்து வாகனங்கள், இலகுரக மோட்டார் வாகனம் என்பதற்கான வரையறையில் இருந்து நீக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.சிறப்பு அனுமதிஇருப்பினும், விபத்துகளில் காப்பீடு வழங்குவது உள்ளிட்டவற்றில் குழப்பம் உள்ளதாக, 76 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இவற்றை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமர்வு, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு, 2022ல் பரிந்துரைத்தது.தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு சட்ட அமர்வு, கடந்தாண்டில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது.நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பி.எஸ். நரசிம்மா, பங்கஜ் மிட்டல், மனோஜ் மிஸ்ரா ஆகியோரும் அடங்கியுள்ள இந்த அமர்வு, ஒருமித்த தீர்ப்பை நேற்று வழங்கிஉள்ளது.அதன்படி, இலகு ரக வாகனம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வைத்துள்ளோர், 7,500 கிலோ வரையிலான எடையுள்ள போக்குவரத்து வாகனத்தையும் இயக்கலாம் என, கூறப்பட்டுள்ளது.அதே நேரத்தில், ஆபத்தான பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை இயக்குவதற்கு சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பது தொடர்கிறது என்றும் அமர்வு கூறியுள்ளது. உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:சாலை பாதுகாப்பு என்பது உலகளாவிய பிரச்னையாக உள்ளது. நம் நாட்டில், ஆண்டுக்கு 1.7 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.ஆனால், இலகு ரக வாகனங்கள் ஓட்டுவதற்கு லைசென்ஸ் வைத்துள்ளவர்கள், போக்குவரத்து வாகனங்களை இயக்குவதாலேயே விபத்துகள் அதிகமாக நடப்பதாக கூற முடியாது. இது தொடர்பாக எந்த ஒரு புள்ளி விபரமும் இல்லை.சாலை விபத்துகளுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதிவேகமாக ஓட்டுவது, தாறுமாறாக ஓட்டுவது, சாலைகளின் வடிவமைப்பு, போக்குவரத்து விதிகளை மீறுவது உள்ளிட்டவை விபத்துகளுக்கு காரணங்களாக உள்ளன.சட்ட திருத்தம்அதுபோல, வாகனம் ஓட்டும்போது, மொபைல்போனில் பேசுவது, சீட் பெல்ட் அல்லது ஹெல்மெட் அணியாதது போன்றவையும் முக்கிய காரணங்களாக உள்ளன.இங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில், இலக ரக வாகன லைசென்ஸ் வைத்துஉள்ளோர் போக்குவரத்து வாகனத்தை இயக்கியதாலேயே அதிக விபத்துகள் ஏற்பட்டதாக உறுதி செய்யப்படவில்லை.லைசென்ஸ் வகைகள் மற்றும் அதற்கான வரம்புகளை நிர்ணயிப்பது தொடர்பாக மத்திய அரசு சட்டத் திருத்தங்கள் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அது நடக்கும் வரை, குழப்பங்களை தவிர்க்கவும், காப்பீட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், இந்த நீதிமன்றத்தின் உத்தரவு இருக்கும். லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் மற்றும் காப்பீட்டு இழப்பீடுகள் கிடைக்கும் வகையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.அதன்படி, இலகு ரக வாகன லைசென்ஸ் உள்ளவர்கள், 7,500 கிலோ வரையிலான எடையுள்ள போக்குவரத்து வாகனங்களை இயக்கலாம். மினி பஸ், சிறிய வகை லாரிகள், 7,500 கிலோவுக்குள் அடங்கும் என, நெடுஞ்சாலைத் துறையினர் வாகனங்களுக்கான எடை விதிகளை உருவாக்கி வைத்துள்ளனர்.அதனால், உச்ச நீதிமன்றம் 2017ல் அளித்த உத்தரவை உறுதி செய்கிறோம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.