உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வலை வளை: நவ. 27

வலை வளை: நவ. 27

ஹிந்தி சினிமா பாடலுக்கு நேபாள ஆசிரியை நடனம் மாணவ, மாணவியருடன் இணைந்து நேபாள பள்ளி ஆசிரியை சீமா ஆடிய நடனம், வலைதளங்களில் பரவி வருகிறது. ‘தில்ரூபா தில்நஷீன்’ என்று தொடங்கும் ஹிந்தி சினிமா பாடலுக்கு அவர்கள் ஆடினர். அங்குள்ள சித்வான் மாவட்ட பள்ளியில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. வீடியோவை பார்த்த ஹிந்தி பாடலின் ஆசிரியர் சித்தாந்த் கவுஷால், ஆசிரியை சீமாவை பாராட்டி பதிவிட்டுள்ளார். 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். மாப்பிள்ளைக்கு 75 மணப்பெண்ணுக்கு 63 ஹிமாச்சல் மாநிலத்தை சேர்ந்த 75 வயது கன்னையா லாலுக்கும், 63 வயது சவினாவுக்கும் முதியோர் இல்லத்தில் திருமணம் கோலாகலமாக நடந்தது. ஆதரவற்ற இருவரும் முதியோர் இல்லத்தில் சந்தித்தபோது, தங்களது கடந்த கால துயரங்களை பரிமாறிக் கொண்டனர். அவர்களது நெருக்கத்தை கண்ட காப்பக நிர்வாகிகள், இருவருக்கும் முன்னின்று திருமணம் நடத்தி வைத்தனர். அழைப்பிதழ், பிளக்ஸ் பேனர் அச்சிட்டு விழா நடந்தது. கண்கவர் ஆடை அலங்காரத்தில் இருந்த தாத்தாவும், பாட்டியும் நடனம் ஆட, உடன் இருந்தவர்களும் சேர்ந்து ஆட, திருமணம் சிறப்பாக நடந்தேறியது. அரசு அதிகாரிகளும் விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்தியாவில் இருக்கிறது இசைக்கலைஞரின் இதயம் சுவிட்சர்லாந்தை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கேல் ஹீஸ், அந்த நாட்டின் ஜூரிச் ரயில் நிலையத்தில் ‘ஹே போல்யா ஷங்கரா’ என்ற மராத்தி மொழி சிவ பக்திப்பாடலை ராகத்துடன் பாடினார். ‘ஐரோப்பிய வேர்களும், எல்லைகளற்ற இதயமும் கொண்டவன்’ என்று தன்னை கூறிக்கொள்ளும் மைக்கேல் ஹீஸ், ‘சுவிட்சர்லாந்தில் இருந்து... போலேநாத் மகிழ்ச்சி அளிக்கட்டும். என் இதயம் இன்னும் இந்தியாவில்தான் இருக்கிறது’ என்ற தலைப்புடன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். வீடியோ, வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தகன சேவை ‘ஸ்டார்ட் – அப்’ டில்லியில் அமோக வரவேற்பு டில்லியை சேர்ந்த, ‘ஸ்டார்ட் – அப்’ நிறுவனம், உடல் தகன சேவை வழங்குகிறது. இறந்தவரின் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்பவர்கள் முதல், மலர் அலங்காரம், சொர்க்க ரதம் ஏற்பாடு, புரோகிதர்கள், தகனம் செய்வது என அனைத்தையும் அவர்களே பார்த்துக் கொள்வர். அஸ்தியை சேகரித்து, படகில் சென்று ஆற்றில் கரைக்கவும் உதவி செய்வர். சேவைக்கு ஆரம்ப கட்டணம் 6 ஆயிரம் ரூபாய்; அதிகபட்ச கட்டணம் 1.50 லட்சம் ரூபாய். 300 பேர் முன்பதிவு செய்துள்ளனர். ‘தான் இறந்தால் எந்த வகையில் தகனம் செய்ய வேண்டும் என்பதை உயிருடன் இருப்பவர் முன்பதிவு செய்யலாம்’ என்கின்றனர், ‘மோக்ஷ் வோயேஜ்’ ‘என்ற இந்நிறுவனத்தினர், ஒப்பாரி வைக்கவும் ஆள் கூட்டி வருவார்களா என்பது பற்றி தகவல் இல்லை. கோவா பயணம் முடிந்தது கண்ணீரில் பிரிட்டன் பெண் இந்தியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த பிரிட்டன் பெண் அய்மீ பெட்போர்டு, 39, கோவா மாநிலத்தில் ஒரு வாரம் தங்கியிருந்தார். வெவ்வேறு பகுதிகளை சுற்றியவருக்கு நாடு திரும்பவே மனம் இல்லை. கடற்கரையில் கண்ணீர் மல்க அமர்ந்திருந்த அய்மீ, ‘இந்தியாவில் தான் அமைதியை உணர்ந்தேன்’ என்கிறார். ‘இது ஒரு அழகு மிளிரும் இடம். இந்த 7 நாட்களில் நானும், என் குழந்தைகளும், நிறைய கற்றுக் கொண்டோம், திரும்பிச் செல்லவே மனம் இல்லை. இங்கு தங்கியிருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் நான் மறக்க மாட்டேன்’ என்கிறார் அவர். வீடியோவை பார்த்த வலைதளவாசி ஒருவர், ‘கோவா என்பது இடம் அல்ல; அது ஒரு உணர்வு’ என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை