உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தவறுக்கு துணை போனது கிடையாது : சொல்கிறார் அஜித் பவார்

தவறுக்கு துணை போனது கிடையாது : சொல்கிறார் அஜித் பவார்

மும்பை: '' எனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் தவறுகளுக்கு நான் என்றும் துணை போனது கிடையாது,'' என நில விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில் மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் விளக்கமளித்துள்ளார்.மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவாரின் மகன் பார்த் பவாருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்துக்கு 1,600 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம், விதிகளை மீறி 300 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பது அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இந்த நிலத்தை வெறும் 500 ரூபாய் முத்திரைத்தாளில் அவர் எழுதி வாங்கியிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து எதிர்க்கட்சிகள் மாநில அரசை கடுமையாக விமர்சிக்க துவங்கின. காங்கிரஸ் எம்பி ராகுலும் பாஜ அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டார்..இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அஜித்பவார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எனது 35 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் நான் எந்த விதிமுறைகளையும் மீறியது கிடையாது. எனது குடும்பம் மற்றும் நெருக்கமானவர்களில் யாரேனும் தவறு செய்ய துணிந்தால் அதனை ஆதரித்ததும் கிடையாது. இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து தகவல்களையும் சேகரித்துள்ளேன். முதல்வர் பட்னாவிசை சந்தித்து நடந்ததை சொல்லியுள்ளேன். அவர் விசாரணைக்கு உத்தரவிடலாம். அனைத்து பரிமாற்றமும், ஆவணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை முடிந்து ஒரு மாதத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும். யாரேனும் எனது பெயரை பயன்படுத்தி ஏதாவது வேலை ஒன்றை செய்து கொடுக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்தால் அதற்கு அடிபணியக்கூடாது எனவும், யாரும் தவறு செய்யக்கூடாது எனவும் எனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள் அனைவருக்கும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விவகாரத்தில் இதுவரை பணப்பரிமாற்றம் ஏதும் நடக்கவில்லை. எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்தவர்கள், இதில் தொடர்புடையவர்கள், இந்த பரிமாற்றத்தை செய்தவர்கள் உட்பட அனைத்தும் குறித்தும் விசாரணை நடத்தப்படும்.நானோ அல்லது எனது அலுவலகமோ ஏதாவது உதவி செய்து கொடுங்கள் , உதவி செய்யுங்கள் என யாரிடமும் கூறவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். எங்களுக்கு கிடைத்த தகவலின்படி நிலத்தை வாங்குவதற்கு ஒப்பந்தம் மட்டுமே போடப்பட்டுள்ளது. எந்த பணப்பரிமாற்றமும் நடக்கவில்லை. எனது மகன் பார்த் பவார், அவரது நிறுவனம் அல்லது எனது குடும்பத்தினர் யாரும் விற்பவரிடம் எந்த பணமும் கொடுக்கவில்லை. அந்த நிலத்தின் உரிமையை எடுக்கவில்லை. இதனால், பரிமாற்றம் முழுமையடையவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் அஜித் பவார் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Iyer
நவ 07, 2025 21:26

உங்கள் மகனுக்கு நீங்கள் துணைபோகாமல் நிரபராதியாக இருக்கலாம். ஆனால் - PUBLIC PERCEPTION - க்கு உட்பட்டுதான் பொதுவாழ்வில் உள்ளவர்கள் நடக்கவேண்டும். மேலும் இவ்வளவு பெரிய TRANSACTION உங்களுக்கு தெரியாமல் நடந்துள்ளது என்பதை ஜீரணிக்கமுடியவில்லை இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும்வரை நீங்கள் பதவி விலகி இருப்பது - உங்களுக்கும் நல்லது - உங்கள் கூட்டணிக்கும் நல்லது.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 07, 2025 20:30

மகாராஷ்ட்ரா ஆட்சி கவிழப் போகுதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை