தெருவில் இனி கால்நடை தொல்லை இருக்காது
மாடல்டவுன்:“டில்லியின் தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளால் இனி தொல்லை இருக்காது,” என, மாநில மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்தார்.டில்லியின் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க எந்த அரசும் முன்வந்ததில்லை.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாடல் டவுன் பகுதிக்கு அமைச்சர் கபில் மிஸ்ரா ஆய்வு மேற்கொண்டார். அங்கு பல்வேறு துறைகளின் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகளுடன் கோசாலைகள் மேம்பாடு மற்றும் தெருவில் திரியும் கால்நடைகளின் மறுவாழ்வு குறித்து ஆலோசனை நடத்தினார்.அப்போது, கோசாலைகளை நிர்வகிப்பதற்கான குத்தகை காலத்தை நீட்டிக்கவும், கால்நடைகளுக்கு தீவனத்துக்கான 20 ரூபாய் என்ற ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் அமைச்சரிடம் கோசாலை நடத்துபவர்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்த டில்லி மாநகராட்சி ஆணையர், மேம்பாட்டு ஆணையர், கூடுதல் இயக்குநர், மேம்பாட்டுத் துறையின் கால்நடை பராமரிப்பு இயக்குநர் மற்றும் பிற சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும்படி செயலருக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.இந்த கூட்டம் ஜூன் 5ம் தேதி மாடல் டவுன் எம்.எல்.ஏ., அசோக் கோயல் முன்னிலையில் நடைபெறுமென அமைச்சர் தெரிவித்தார்.இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், “சாலைகளில் கால்நடைகளின் தொல்லை இனி இருக்காது. தெருக்களில் திரியும் கால்நடைகள் அல்லது விலங்குகள் மீட்கப்பட்டு, அவை அனைத்தும் பாதுகாப்பான, சுத்தமான மற்றும் சாதகமான சூழலில் பராமரிக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும்,” என்றார்.