| ADDED : நவ 17, 2025 04:14 AM
பாட்னா: 'தந்தைக்கு சிறுநீரகம் அளித்த என் மீது அவதுாறு கருத்துகளை கூறியதுடன், என்னை செருப்பால் அடிக்கவும் முயற்சிகள் நடந்தன' என, ராஷ்ட்ரீய ஜனதா தள நிறுவனரும், பீஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மகள் ரோஹிணி ஆச்சார்யா பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பீஹாரில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய, 'மஹாகட்பந்தன்' கூட்டணி, 34 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை தழுவியது. லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா, அரசியலை விட்டும், குடும்பத்தை விட்டும் விலகுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். சமரசம் இல்லை இந்நிலையில், சமூக வலைதளத்தில் ரோஹிணி நேற்று பதிவிட்டுள்ளதாவது: நேற்று முன் தினம் என் வீட்டில் உள்ளவர்களால் அவமானப்படுத்தப்பட்டேன். மோசமான சொற்களால் வசைப்பாடினர். என்னை செருப்பால் அடிக்கவும் முயன்றனர். நான் என் சுயமரியாதையை சமரசம் செய்துகொள்ளவில்லை. உண்மையை விட்டுக் கொடுக்கவில்லை. இதன் காரணமாக நான் அவமானத்தைத் தாங்க வேண்டியிருந்தது. அழுதுகொண்டே என் பெற்றோரையும், சகோதரிகளையும் விட்டுச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. நான் என் தாய் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் அனாதையாக்கப்பட்டேன். நீங்கள் என் வழியைப் பின்பற்றக்கூடாது. எந்த வீட்டிற்கும் ரோஹிணியைப் போன்ற ஒரு மகள் அல்லது சகோதரி இருக்கக் கூடாது. சிறுநீரக தானம் என் தந்தையின் உடல்நிலை முக்கியம் எனக்கருதி, என் சிறுநீரகத்தை தானமாக அளித்தேன். இதை என் புகுந்த வீட்டிற்குக் கூடச் சொல்லவில்லை. திருமணமான அனைத்து பெண்களிடமும் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். உங்கள் பிறந்த வீட்டில் ஒரு சகோதரர் இருக்கும்போது, தவறி கூட உங்கள் தந்தையை காப்பாற்றும் பொறுப்பை ஏற்காதீர். உங்கள் சகோதரரின் சிறுநீரகத்தை தானமாக அளிக்கும்படி கேளுங்கள். உங்களைப் பற்றி மட்டுமே சிந்தியுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.