கணவனை அடித்து கொன்ற 3வது மனைவி கைது
போபால்: மத்திய பிரதேசத்தில் கணவரை, மூன்றாவது மனைவி தன் கள்ளக்காதலருடன் சேர்ந்து அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்டம் சகாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் பயாலால் ரஜாக், 60. இவரது முதல் மனைவி பிரிந்து சென்றதை அடுத்து குட்டி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லாததை அடுத்து, குட்டியின் சகோதரி விமலாவை, ரஜாக் மூன்றாவதாக திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மூன்றாவது மனைவி விமலாவுக்கு சொத்து புரோக்கர் லாலுவுடன் தொடர்பு ஏற்பட்டது. கணவரை கொன்றுவிட்டு லாலுவுடன் சேர்ந்து வாழலாம் என முடிவு செய்தார் விமலா. புதிதாக கட்டி வரும் வீட்டில் கட்டிலில் படுத்திருந்த ரஜாக்கை, விமலா, கள்ளக்காதலன் லாலு மற்றும் அவருடைய நண்பரான தீரஜ் கோல் என்பவருடன் சேர்ந்து கடந்த 30ம் தேதி இரும்பு கம்பியால் தாக்கி கொன்றார். பின்னர் உடலை சாக்கு மூட்டையில் கட்டி எடுத்து சென்று கிணற்றில் வீசினர். இந்நிலையில் கணவரை காணாததால், இரண்டாவது மனைவி குட்டி பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது ஊருக்கு வெளியே உள்ள கிணற்றில் ரஜாக் சடலம் மிதப்பதை அறிந்து மீட்டனர். பிரேத பரிசோதனையில் ரஜாக் தலையில் அடித்து கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக குட்டி அளித்த புகாரின்படி, விமலா, லாலு மற்றும் தீரஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.