| ADDED : பிப் 13, 2024 12:58 AM
கொச்சி, கேரளாவில் பார் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஊழியர்கள் மூன்று பேர் படுகாயமடைந்தனர். கேரளாவின் கொச்சியில் உள்ள கத்திரிகடவு பகுதியில் மதுபான விடுதி இயங்கி வருகிறது-. இங்கு நேற்று முன்தினம் இரவு மது அருந்த வந்த சிலர், நுழைவாயிலில் நின்று தகராறில் ஈடுபட்டனர். அப்போது, அதை தட்டிக் கேட்ட மேனேஜரை அவர்கள் திடீரென தாக்கினர். இது குறித்து கேள்வி எழுப்பிய பார் ஊழியர்கள் சுஜின், அகில் ஆகியோரையும் தகராறு செய்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. அதன் முடிவில், தகராறில் ஈடுபட்டவர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் பார் ஊழியர்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.இதில், சுஜின், அகில் ஆகியோரின் வயிறு மற்றும் தொடைகளில் காயம் ஏற்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூன்று பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தப்பியோடிய நான்கு பேர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தப்பி ஓடியவர்களை தேடி வரும் போலீசார், அவர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.