காலிஸ்தான் பயங்கரவாதிகள் மூவர் உ.பி., போலீசாரால் சுட்டுக்கொலை
பிலிபித் : பஞ்சாபில், போலீஸ் ஸ்டேஷன்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்த 'காலிஸ்தான் ஜிந்தாபாத் படை' என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர், உத்தர பிரதேசத்தின் பிலிபித் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் கலனுார் பகுதியில் உள்ள பக் ஷிவாடா போலீஸ் ஸ்டேஷன் மீது, நம் அண்டை நாடான பாக்., ஆதரவுடன் செயல்படும், காலிஸ்தான் ஜிந்தாபாத் படை என்ற அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர்.தொடர்ந்து, குர்தாஸ்பூர் போலீஸ் சோதனைச்சாவடி மீது, அந்த அமைப்பின் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்கினர். இந்தியா - பாக்., எல்லையில் குர்தாஸ்பூர் அமைந்துள்ளதால், காலிஸ்தான் ஜிந்தாபாத் படையினர் நம் போலீஸ் ஸ்டேஷன்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், உ.பி.,யின் பிலிபித் மாவட்டத்தில் உள்ள புரான்பூர் என்ற பகுதியில், காலிஸ்தான் ஜிந்தாபாத் படை பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்படி, உ.பி., - பஞ்சாப் போலீசார் இணைந்து நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது, மறைந்திருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்; போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், காலிஸ்தான் ஜிந்தாபாத் படையைச் சேர்ந்த வரிந்தர் சிங், 23, குர்விந்தர் சிங், 25, பர்தாப் சிங், 18, ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களிடம் இருந்து ஏ.கே., 47 ரக துப்பாக்கிகள், வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. என்கவுன்டர் நடந்த இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறுகையில், “காலிஸ்தான் ஜிந்தாபாத் படை தலைவராக, ரஞ்சீத் சிங் நிடா உள்ளார். இந்த அமைப்பை, கிரீசில் வசிக்கும் ஜஸ்விந்தர் சிங், பிரிட்டன் ராணுவத்தில் பணிபுரியும் ஜக்ஜீத் சிங் ஆகியோர் கட்டுப்படுத்துகின்றனர். ''பதே சிங் பாக்கி என்பவரது பெயரை, ஜக்ஜீத் சிங் பயன்படுத்தி உள்ளார். இதில் தொடர்புடையோரை கைது செய்யும் பணி நடக்கிறது,” என்றார்.