| ADDED : செப் 09, 2025 02:38 AM
பரிதாபாத் : ஹரியானாவில், 'ஏசி' வெடித்து சிதறிய விபத்தில் கணவன், மனைவி, மகள் மற்றும் வளர்ப்பு நாய் உயிரிழந்தது. உயிர் தப்புவதற்காக ஜன்னல் வழியே வெளியே குதித்த மகனுக்கு கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள, 'க்ரீன் பீல்டு காலனி' என்ற இடத்தில் நான்கு மாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, இரண்டாவது தளத்தில் சச்சின் கபூர், 49, வசித்து வந்தார். முதல் தளத்தில் ஒரு குடும்பம் வசித்து வருகிறது. மூன்றாவது தளத்தை, தன் தொழிலுக்காக சச்சின் பயன்படுத்தி வந்தார். நான்காவது மாடியில் ஏழு பேர் உடைய குடும்பம் வசித்து வருகிறது. இந்த சூழலில், முதல் தளத்தில் இருந்த வீட்டு 'ஏசி'யின் 'கம்ப்ரசர்' நேற்று அதிகாலை 1:30 மணிக்கு வெடித்தது. இதனால், இரண்டாவது தளத்தில் சச்சின் வசிக்கும் வீட்டில் புகை மண்டலம் சூழ்ந்தது. அடர் கரும்புகையில் சிக்கி மூச்சு திணறியதில், சம்பவ இடத்திலேயே சச்சின், அவர் மனைவி ரிங்கு, 48, மகள் சஜ்ஜயின், 13, ஆகியோர் உயிரிழந்தனர். அவர்கள் வீட்டு நாயும் பலியானது. சச்சினின் மகன் ஆர்யன், உயிர் தப்புவதற்காக இரண்டாவது மாடி ஜன்னல் வழியே வெளியே குதித்தார். இதனால் காலில் எலும்பு முறிந்தது. ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 'ஏசி கம்ப்ரசர்' வெடித்த வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்றதாக கூறப்படுகிறது.