துப்பாக்கிச்சூடு நடத்திய மூன்று பேர் பிடிபட்டனர்
புதுடில்லி: வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். வடமேற்கு டில்லி முகுந்த்பூரில் வசிப்பவர் நரேஷ் ராஜ்புத். அவரது மகன் ஜதின், போலீசில் கொடுத்த புகாரில், “அடையாளம் தெரியாத சிலர் தன் வீட்டுக்கு வெளியே துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியதாக,”கூறியிருந்தார். விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, நான்கு தோட்டாக்களை மீட்டனர் . முகுந்த்பூர் மச்சி பஜார் சவுக்கில் அங்கித் என்பருடன் ஜதின் மற்றும் அவரது நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கித் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆயுஷ், ராஜா, சுமித் என்ற கபாரியா, மணீஷ் என்ற டோட்லா ஆகியோர் இரண்டு பைக்குகளில் ஜதின் வீட்டுக்கு வந்து, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியது விசாரணையில் தெரிய வந்தது . இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அங்கித், மணீஷ் மற்றும் சுமித் ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்களை தேடுகின்றனர்.