கோசாலையில் 100 பசுக்கள் இறந்து விட்டதாக புரளி; திருப்பதி தேவஸ்தானம் கண்டனம்
திருமலை: வெங்கடேஸ்வரா கோசாலையில் 100க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழந்ததாக கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என்று திருப்பதி தேவஸ்தானம் மறுத்துள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தானம், வெங்கடேஸ்வரா கோசாலையை நிர்வகித்து வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்துவிட்டதாக கோயிலின் முன்னாள் அறங்காவலரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் சித்தூர் மாவட்ட தலைவருமான கருணாகர ரெட்டி குற்றம்சாட்டி இருந்தார். உண்மை என்ன என்பது பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து இருந்தார்.இந்த குற்றச்சாட்டுக்கு திருப்பதி தேவஸ்தானம் மறுப்பும், விளக்கமும் அளித்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது; பக்தர்களையும், பொதுமக்களையும் தவறாக வழிநடத்தும் நோக்கத்தில் தவறான தகவல்களை பரப்பப்படுவதை தேவஸ்தான் வன்மையாக கண்டிக்கிறது. பக்தர்கள் இது போன்ற தவறான செய்திகளை நம்ப வேண்டாம். விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.இதனிடையே, கருணாகர ரெட்டியின் குற்றச்சாட்டை சந்திரபாபு நாயுடு மகனும், அமைச்சருமான நர லோகேஷ் மறுத்துள்ளார். உள்நோக்கத்துடன் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று குறிப்பிட்டுள்ள அவர், இதில் உண்மை எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.