போனஸ் குறைந்ததால் அதிருப்தி; வாகனங்களை இலவசமாக அனுமதித்த சுங்கச்சாவடி ஊழியர்கள்
ஆக்ரா: உத்தர பிரதேசத்தில், பதேஹாபாத் சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்கள், நிறுவனம் அளித்த தீபாவளி போனஸ் திருப்தி அளிக்காததால், சுங்கக் கட்டணம் வசூலிக்காமல் ஆயிரக்கணக்கான வாகனங்களை இலவசமாக அனுமதித்தனர். உ.பி.,யில் உள்ள ஆக்ரா - லக்னோ விரைவு சாலையில், பதேஹாபாத் சுங்கச்சாவடி உள்ளது. இதை, கடந்த மார்ச் முதல், 'ஸ்ரீ சைன் அண்டு டாட்டர்' என்ற நிறுவனம் நிர்வகிக்கிறது. இந்த சுங்கச்சாவடியில், 21 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு தீபாவளி போனசாக, தலா, 1,100 ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள், நேற்று முன்தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சுங்கச்சாவடியின் அனைத்து நுழைவு வாயில்களையும் திறந்து விட்டனர். இதனால், சுங்கக் கட்டணம் செலுத்தாமல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இலவசமாக கடந்து சென்றன. இதையறிந்த நிறுவனம், மற்ற சுங்கச்சாவடிகளில் இருக்கும் ஊழியர்களை பதேஹாபாத் சுங்கச்சாவடிக்கு அனுப்பியது. அவர்களையும் வேலை செய்ய விடாமல் தடுத்து, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் தகவலை அறிந்த போலீசார், சுங்கச்சாவடிக்கு விரைந்து வந்து ஊழியர்களிடமும், நிறுவன அதிகாரிகளிடமும் பேச்சு நடத்தினர். அப்போது, உடனடி தீர்வாக, 10 சதவீத சம்பள உயர்வு அளிப்பதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, போராட்டத்தை ஊழியர்கள் கைவிட்டு பணிக்கு திரும்பினர்.