சுங்கச்சாவடி அதிகாரி கொலை 3 ஊழியர்கள் சுட்டுப் பிடிப்பு
முசாபர்நகர்:சுங்கச்சாவடி துணை மேலாளரை கொலை செய்த வழக்கில், மூன்று பேரை கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பின் கைது செய்யப்பட்டனர். டில்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் சாப்பர் என்ற இடத்தில் சுங்கச் சாவடி அமைந்து உள்ளது. இந்தச் சாவடி ஊழியர்கள் சுகம், ஷிவ் மாலிக் ஆகிய இருவரும் தாமதமாக பணிக்கு வந்ததால், சாவடியின் துணை மேலாளர் அரவிந்த் பாண்டே திட்டியுள்ளார். ஆத்திரம் அடைந்த இருவரும், 18ம் தேதி இரவு அரவிந்தை கடத்திச் சென்று கொலை செய்தனர். நேற்று முன் தினம் காலை, ஜானி பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் அரவிந்த் உடலை போலீசார் மீட்டனர். இந்தத் தாக்குதலில் காயம் அடைந்த சுங்கச்சாவடி மேலாளர் முகேஷ் சவுகான் கொடுத்த புகார்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், சிசோனா சாலை அருகே வாகன சோதனை நடத்திய போது, ஒரு காரை மறித்தனர். காருக்குள் இருந்த சுபம், சேகர் மற்றும் பிரதீப் குமார் ஆகிய மூவரும் போலீசை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். போலீசார் கொடுத்த பதிலடியில் சுபம் மற்றும் சேகர் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். காரை சுற்றி வளைத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர். காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கார், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் இரண்டு கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.