மைசூரு : ''மைசூரில் இருந்து, அயோத்திக்கு பிப்ரவரி 14 முதல், 15 நாட்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். பிப்ரவரி 4 இரவு 12.05க்கு முதல் ரயில் போக்குவரத்து துவங்கும். இந்த ரயில் 1,280 இருக்கை வசதி கொண்டதாகும். இன்னும் டிக்கெட் புக்கிங் துவங்கவில்லை,'' என பா.ஜ., எம்.பி., பிரதாப் சிம்ஹா தெரிவித்தார்.மைசூரில் நேற்று அவர் கூறியதாவது:காங்கிரஸ் ஆட்சியில், ராமனுக்கு முக்கியத்துவம் இல்லை என்பது, மறுக்க முடியாத உண்மையாகும். மாநிலத்தில் ராம பக்தர்களின் விருப்பத்துக்கு தகுந்த அரசு இல்லை என்பது, மக்களுக்கு புரிந்துள்ளது.தன் தந்தையே ஐந்தாண்டு முதல்வர் என, எதீந்திரா கூறியுள்ளார். துணை முதல்வர் சிவகுமாரை நினைத்தால், எனக்கு பாவமாக இருக்கிறது. எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு பின், ஒக்கலிகர் முதல்வராக வாய்ப்பு வந்துள்ளது என, சட்டசபை தேர்தலுக்கு முன் சிவகுமார் கூறினார். கட்சியை பலப்படுத்தினார். சொந்த பணத்தை முதலீடு செய்தார்.காங்கிரஸ் அரசு வந்த பின், சித்தராமையா பிடிவாதம் பிடித்து முதல்வரானார். முதல்வர் நாற்காலியில் அமர்ந்த போதே, ஐந்தாண்டும் தானே முதல்வராக நீடிக்க வேண்டும் என, அவர் முடிவு செய்துவிட்டார். இப்போது, அதையே தன் மகன் வாயால் கூற வைத்து சிவகுமாருக்கு உணர்த்தியுள்ளார்.தன் சமுதாயத்தினரும், முஸ்லிம்களும் தன் தந்தையை ஆதரித்ததாக, எதீந்திரா கூறியுள்ளார். சாமுண்டீஸ்வரி தொகுதியில், சித்தராமையாவுக்கு ஒக்கலிகர் ஓட்டு போடவில்லையா. வருணா தொகுதியில் இவருக்கு லிங்காயத் சமுதாயத்தினர் ஓட்டு போட்டனர். சித்தராமையா, தன் மகன் தோள் மீது, துப்பாக்கியை வைத்து சிவகுமாரின் இதயத்தில் சுட்டுள்ளார்.சிவகுமாருக்கு எதிரிகள், வெளியே இல்லை. அவரது கட்சிக்குள்ளேயே உள்ளனர். இவருக்கு சித்தராமையாவே எதிரி. 39 லிங்காயத் எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றுள்ளனர். சிவகுமார் முதல்வராவார் என, கருதி ஒக்கலிகர்கள் ஓட்டு போட்டனர். சித்தராமையா அனைவருக்கும் சண்டை மூட்டிவிட்டு, தானே பதவியில் நீடிக்க முயற்சிக்கிறார்.மைசூரில் இருந்து, அயோத்திக்கு பிப்ரவரி 14 முதல், 15 நாட்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். பிப்ரவரி 4ல் இரவு 12.05 மணிக்கு முதல் ரயில் போக்குவரத்து துவங்கும். இந்த ரயில் 1,280 இருக்கை வசதி கொண்டதாகும். இன்னும் டிக்கெட் புக்கிங் துவங்கவில்லை. இதற்கான ஏற்பாடு நடக்கிறது.இவ்வாறு அவர்கூறினார்.