டிஜிட்டல் மயமாகிறது சபரிமலை உள்ளிட்ட திருவிதாங்கூர் தேவசம் போர்டு கோயில்கள்
சபரிமலை : சபரிமலை உள்ளிட்ட திருவிதாங்கூர் தேவசம்போர்டின் கீழ் உள்ள அனைத்து கோயில்களின் செயல்பாடும் டிஜிட்டல்மயமாகிறது. இதற்காக சென்னையைச் சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் அதன் கீழ் உள்ள கோயில்களை டிஜிட்டல்மயமாக்க சைபர் தடயவியல் நிபுணர் டாக்டர் வினோத் பட்டதிரிபாடு தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சாப்ட்வேர் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. சென்னையை சேர்ந்த என்.ஐ.சி., நிறுவனத்துடன் இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.இந்நிறுவனம் தமிழ்நாடு தேவசத்துக்கும் சாப்ட்வேர் வழங்கியுள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு வழங்கும் சாப்ட்வேரும் இதனுடன் ஒத்துப்போக வாய்ப்புள்ளது. எண்பது சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானதும் இது முழுமை பெறும் என தேவசம் போர்டு அதிகாரிகள் கூறினர். முதற்கட்டமாக ரசீதுகள், பண பரிமாற்றம், டிஜிட்டல் மையமாகும். அதைத்தொடர்ந்து ஊழியர்களின் சம்பளம், டெண்டர்கள் உட்படுத்தப்படும். ஆறு மாதங்களில் முழுமையாக இப்பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதையடுத்து தேவசம் போர்டின் நிலம், சொத்து விபரங்களும் இதில் கொண்டு வரப்படும். தற்போது சபரிமலை உள்ளிட்ட 299 கோயில்களில் டிஜிட்டல் பணபரிமாற்றம் உள்ளது. ஒன்றரை ஆண்டுகளில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முழுமையாக டிஜிட்டல் மையமாகும் எனவும், அதன் பின்னர் போர்டில் புதிய ஆட்டோமேஷன் டிபார்ட்மென்ட் ஏற்படுத்தப்படும் எனவும் தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்தார்.