மரங்கள் காற்றை தரும்; நோயை தருமா?: மத்திய பிரதேச அரசுக்கு கடும் தலைவலி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
தற்போது உலகெங்கும் பேசப்படும் முக்கிய பிரச்னை, பருவநிலை மாறுபாடு. இதைத் தடுக்க அதிகளவில் மரங்களை நட வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால், ஏமன் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டு, மத்திய பிரதேசத்தின் போபாலில் நடப்பட்ட மரங்கள் நோயைப் பரப்புவதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் சிட்டி
மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. கடந்த 2015ல், நாடு முழுதும், 100 நகரங்களில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.நகரங்களின் குறிப்பிட்ட பகுதி தேர்வு செய்யப்பட்டு, அங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு அழகாக்கப்பட்டன. இதில், மத்திய பிரதேசத்தின் போபால் நகரமும் தேர்வு செய்யப்பட்டது. மூன்று ஆண்டு களுக்குப் பின், 2018ல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய நகரமாக, போபால் தேர்வு செய்யப்பட்டது.இது, போபால் நகர நிர்வாகத்துக்கு பெரும் உந்துதலாக அமைந்தது. நகரை பசுமையாக்கும் திட்டம் துவங்கப்பட்டது. மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.சாலைகளில் மரங்கள் நடப்பட்டன. தங்களுடைய வீட்டிலும் மரங்களை நடுவதற்கு மக்கள் விருப்பம் தெரிவித்தனர்.ஆனால், இதுவே மக்களின் சுகாதார பிரச்னைக்கு முக்கிய காரணமானது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. மூச்சுத் திணறல், சுவாச பிரச்னை, நுரையீரல் பிரச்னை, அடிக்கடி தலைவலி என, மக்கள் திடீரென பாதிக்கப்பட்டனர். உடல்நல பிரச்னை
குறிப்பாக, இந்த மரங்கள் அதிகம் நடப்பட்ட ஷ்யாமளா ஹில்ஸ் பகுதியில் இந்த பாதிப்பு அதிகமாக தெரிந்தது. டாக்டர்களிடம் சென்றபோதுதான், அவர்களுடைய வீடுகளில் நடப்பட்டுள்ள, 'கோனாகார்பஸ்' மரங்களே இதற்கு காரணம் என்பது தெரியவந்தது.எப்போதும் பச்சை பசேல் என, மிக உயரமாகவும், அதிக கிளைகளுடன் கூடியதாகவும் இருக்கும் இந்த மரம், மேற்காசிய நாடான ஏமனில் இருந்து தருவிக்கப்பட்டிருந்தது. வெயில் தாக்கத்தை குறைப்பதுடன், இதமான காற்றையும் இந்த மரம் அளிக்கிறது.அதே நேரத்தில், இந்த மரம் வளர்ந்து, பூக்கள் பூத்துக் குலுங்கும்போது, அதில் உள்ள மகரந்தங்கள் காற்றில் பரவுவதால் அதை சுவாசிக்கும்போது, இந்த உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.இந்த ஒரு காரணத்துக்காகவே, இந்த மரத்துக்கு குஜராத், தெலுங்கானா, கர்நாடகா, அசாம் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே தடை விதித்துள்ளன.அறிவியல்பூர்வமாக இந்த மரத்தின் மகரந்தம், சுவாசக்கோளாறு ஏற்படுத்துவதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. அதே நேரத்தில், இந்த மரத்தை அகற்றியபின், தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என, போபால் நகரத்தைச் சேர்ந்த சிலர் கூறியுள்ளனர்.மேலும், இந்த மரம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல என, பல தரப்பினர் கூறுகின்றனர். இந்த மரத்தை யார் தேர்வு செய்தனர் என, முதல்வர் மோகன் யாதவ் அரசுக்கு எதிராக தற்போது கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. - நமது சிறப்பு நிருபர் -