குடியரசு தினவிழாவினை காண மனைவியுடன் சென்ற பழங்குடியின மன்னர்
மூணாறு,:டில்லியில் நடக்கும் குடியரசு தினவிழாவை கண்டு மகிழ பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த காஞ்சியாறு கோவில்மலை ஆஸ்தான மன்னர், மனைவியுடன் சென்றார்கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 48 பழங்குடியினர் உள்ள நிலையில் மன்னான் இனத்தைச் சேர்ந்த 300க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றனர். அந்த இனத்தினர் பாரம்பரிய முறைப்படி மன்னர் தேர்வு செய்வதுண்டு. பாரம்பரிய மன்னர் குடும்பத்தில் மருமகனை மன்னராக தேர்வு செய்வர். தலையில் கிரீடம் உட்பட மன்னருக்கு என தனி உடை, இரண்டு மந்திரிகள், வீரர்கள் ஆகியோரின் சேவையும் உண்டு. தற்போது காஞ்சியாறு கோவில்மலை ஆஸ்தான மன்னராக ராமன் ராஜமன்னான் பினு உள்ளார். அவருக்கு டில்லியில் நடக்கும் குடியரசு தின விழாவை காண மத்திய அரசிடம் இருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பை கேரள ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கேளூ, மன்னர் பினு, அவரது மனைவி பினுமோள் ஆகியோரிடம் வழங்கினார். அப்போது தேவிகுளம் எம்.எல்.ஏ., ராஜா உடனிருந்தார். அவர்கள் இருவரும் நேற்று டில்லி புறப்பட்டனர். குடியரசு தின விழாவுக்கு பிறகு பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு பிப்.,2ல் திரும்புகின்றனர்.