இம்பால்: மணிப்பூரில், பழங்குடியின அமைப்பின் தலைவரை பாதுகாப்பு படையினர் கைது செய்ததை கண்டித்து, அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக, மொத்தம் உள்ள 16 மாவட்டங்களில், ஐந்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதற்றமான சூழலை தணிக்கும் வகையில், இணைய சேவைகளும் ஐந்து நாட்களுக்கு துண்டிக்கப்பட்டுஉள்ளன. ராஜினாமா
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இடஒதுக்கீடு தொடர்பாக மெய்டி - கூகி சமூகத்தினருக்கு இடையே 2023 மே மாதம் மோதல் ஏற்பட்டது. இது, கலவரமாக மாறி ஒன்றரை ஆண்டுகளாக நீடித்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிலைமை கட்டுக்குள் வந்தது.எனினும், ஆயுதமேந்திய போராட்டக்காரர்கள் நடத்தி வரும் தாக்குதல்களால், அவ்வப்போது ஒருசில வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதற்கிடையே, பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் பைரேன் சிங் தன் பதவியை கடந்த பிப்ரவரி 9ம் தேதி ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.இந்நிலையில், கூடுதல் எஸ்.பி.,யின் வீட்டை கடந்த ஆண்டு சூறையாடியதாக தொடரப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், மெய்டி பழங்குடியினத்தின் 'ஆராம்பாய் தெங்கோல்' அமைப்பின் தலைவர் கானன் சிங் என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.இத்தாக்குதல் அரங்கேறியபோது ஹெட் கான்ஸ்டபிளாக கானன் சிங் இருந்த நிலையில், தன் ஒழுங்கீன செயல்களால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன்பின் ஆராம்பாய் தெங்கோல் அமைப்பின் தலைவரானார். தீக்கிரை
கானன் சிங்கின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, மெய்டி சமூகத்தினர் நேற்று முன்தினம் இரவில் இருந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகளை மறித்தும், டயர்களை எரித்தும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கின்றனர். இதில், இரண்டு பஸ்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் ஜீப் உள்ளிட்டவற்றை போராட்டக்காரர்கள் தீக்கிரையாக்கினர்.இதைத் தொடர்ந்து, கவர்னர் மாளிகை நோக்கி வந்த போராட்டக்காரர்களை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர். எனினும், அத்துமீறி செல்ல முயன்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இதில், மூன்று பேர் படுகாயமடைந்தனர்.இதற்கிடையே, கானன் சிங்கின் கைது நடவடிக்கையைக் கண்டித்து, அந்த அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் நேற்று முன்தினம் இரவு இம்பாலில் ஒன்றுகூடி பாதுகாப்பு படையினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது கூட்டாக இணைந்து, தாங்கள் வைத்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து தங்கள் தலையில் ஊற்றியபடி, தீயிட்டு கொளுத்திக் கொள்ள போவதாக மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. ஊரடங்கு
இதன் காரணமாக, மெய்டி இன மக்கள் அதிகம் வசிக்கும் இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, விஷ்ணுபூர், தவ்பால், காக்சிங் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐந்து நாட்களுக்கு இணைய சேவைகளையும் துண்டித்து, மாநில அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.சமீபத்தில் பெய்த கனமழையால், இம்பால் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கு வசித்த 1.65 லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாகினர்; 35,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. குறிப்பாக, இம்பால் கிழக்கு மாவட்டம் கடும் சேதத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.