| ADDED : நவ 01, 2025 12:26 AM
வாஷிங்டன்: அமெரிக்காவின், 'எச் -1பி' விசாவை தவறாக பயன்படுத்தி, அமெரிக்கர்களின் கனவுகள் திருடப்பட்டதாக கூறும் ஒரு விளம்பர வீடியோவை, அமெரிக்க அரசு சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியர்களுக்கு பெரும் பங்களிப்பு இருப்பதாக மறைமுகமாக விமர்சித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில், வெளிநாட்டு பணியாளர்களுக்கான எச் - 1பி விசாவை அமெரிக்க நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், இத்தகைய எச் - 1பி விசாவுக்கான கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தினார். குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு பணியாளர்களை நியமித்து, இளம் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பல அமெரிக்கர்களின் கனவு திருடப்பட்டுள்ளதாகவும் கூறி, டிரம்ப் நிர்வாகம் சமீபத்தில் ஒரு விளம்பர வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பி வருகிறது. அந்த விளம்பரத்தில், எச் - 1பி விசா பெறும் நாடுகளில் இந்தியா, 72 சதவீதம் பங்கு வகிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, எச் - 1பி விசாவை தவறாக பயன்படுத்துவதில் இந்தியர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர் என்ற ஒரு மறைமுகமான குற்றச்சாட்டை அமெரிக்க அரசு இந்தியா மீது சுமத்தியுள்ளது. இந்த விளம்பரம் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு மற்றும் குடியேற்ற கொள்கைகளில், உள்நாட்டு பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தற்போதைய நிர்வாகத்தின், 'அமெரிக்கா பர்ஸ்ட்' என்ற நிலைப்பாட்டை குறிப்பதாகும். இத்திட்டத்தின் நோக்கம், அமெரிக்க நிறுவனங்கள் குறைவான ஊதியம் பெறும் வெளிநாட்டு ஊழியர்களை பயன்படுத்தி, அமெரிக்க ஊழியர்களை நீக்குவதை தடுப்பதாகும். இதை குறிக்கும் வகையில், இந்த விளம்பரத்தின் இறுதியில், 'அமெரிக்கர்களுக்கான அமெரிக்க கனவை மீட்டெடுப்போம்' என்ற செய்தி வலியுறுத்தப்பட்டுள்ளது.