உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானா அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு: கவர்னருக்கு துஷ்யந்த் சவுதாலா கடிதம்

ஹரியானா அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு: கவர்னருக்கு துஷ்யந்த் சவுதாலா கடிதம்

சண்டிகர்: ஹரியானாவில் சுயேச்சைகள் ஆதரவை வாபஸ் பெற்றதை தொடர்ந்து, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அம்மாநில கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு முன்னாள் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா கடிதம் எழுதி உள்ளார்.ஹரியானா சட்டசபை மொத்த உறுப்பினர்கள் 90. கடந்த 2019 தேர்தலில் பா.ஜ., 40 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 31 இடங்கள் கிடைத்தன. ஜே.ஜே.பி., எனப்படும் ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களை பிடித்தது. அக்கட்சியின் ஆதரவுடன் பா.ஜ., ஆட்சி அமைத்தது. மனோகர் லால் கட்டார் முதல்வர் ஆனார். கட்சி கட்டளைப்படி கட்டார் ராஜினாமா செய்தார். ஒரு சுயேச்சையும் விலகினார். எனவே, சட்டசபை பலம் 88 ஆனது.கட்டாருக்கு பதில் முதல்வரான நயாப் சிங் சைனி அரசுக்கு ஜே.ஜே.பி.,யும் ஆறு சுயேச்சைகளும் ஆதரவு அளித்தனர். மார்ச்சில் ஜே.ஜே.பி., ஆதரவை விலக்கிக் கொண்டது. நேற்று முன்தினம்( மே 07) மூன்று சுயேச்சைகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவை விலக்கிக் கொண்டு, காங்கிரஸ் பக்கம் சாய்ந்தனர். இதனால், பா.ஜ., பெரும்பான்மை ஆதரவை இழந்தது. அதன் பலம் 43 ஆக உள்ளது.இந்நிலையில், ஹரியானா முன்னாள் துணை முதல்வரும், ஜேஜேபி கட்சி தலைவருமான துஷ்யந்த் சவுதாலா எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: சுயேச்சைகள் ஆதரவை வாபஸ் பெற்றதால் மாநில அரசு பெரும்பான்மை இழந்துவிட்டது என்பது தெளிவாக தெரிகிறது. நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தற்போதைய அரசியல் நிலவரம் காரணமாக மாநிலத்தில் குழப்பமான சூழ்நிலை காணப்படுகிறது. எனக்கூறியுள்ளார்.இதனிடையே முதல்வர் நயாப் சிங் சைனி கூறுகையில், அரசுக்கு சிக்கல் ஏதும் இல்லை. மார்ச் மாதம் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் நாங்கள் வெற்றி பெற்றோம். மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டால், உரிய நேரத்தில் அதனை எதிர்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.இதனிடையே, மாநில அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதுடன், விரைவில் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் எனக்கூறியிருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது கவர்னரை சந்திக்க முடிவு செய்துள்ளது. தங்களது கட்சி நிர்வாகிகளுடன் வந்து சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கும்படி கவர்னருக்கு அக்கட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Balasubramanian Sundaram
மே 09, 2024 21:23

தனியார் தங்களுக்கு ஒத்து வரவில்லையானால் கவிழ்த்து விடுவார்கள் இது அரசியல் ஜனநாயக நாடகம்


ஆரூர் ரங்
மே 09, 2024 18:49

தொகுதி உடன்பாட்டில் பிரச்சினை என்பதற்காக அணி மாறுவது வாக்களித்த மக்களை இழிவுபடுத்தும் செயல்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ