இரண்டு சரக்கு ரயில்கள் மோதல்; 2 டிரைவர்கள் பலி; 4 பேர் காயம்
ராஞ்சி; என்.டி.பி.சி., எனப்படும் தேசிய அனல்மின் நிறுவனம் பராமரிக்கும் ரயில் பாதையில், அந்த நிறுவனத்தின் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், இரண்டு டிரைவர்கள் பலியாயினர்; மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.பொதுத்துறை நிறுவனமான என்.டி.பி.சி., பீஹாரின் பாகல்புர் மாவட்டம் காகல்கோன் மின் நிலையத்தில் இருந்து, மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பருக்கா மின் நிலையத்துக்கு இடையே, நிலக்கரியை எடுத்துச் செல்வதற்கான ரயில் பாதையை அமைத்துள்ளது.இந்த ரயில் பாதையில், ஜார்க்கண்ட் மாநிலம் போக்நதி அருகே, நேற்று அதிகாலை, அந்த நிறுவனத்தின் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், இரண்டு ரயில்களின் டிரைவர்களும் உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் காயமடைந்தனர். நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, ரயில்வே நிர்வாகம் மீட்புப் பணியில் ஈடுபட்டது. 'நிறுவனத்துக்கு சொந்தமான ரயில் பாதையில், அந்த நிறுவனத்தின் சரக்கு ரயில்கள் இடையே இந்த விபத்து நடந்துள்ளது. 'இதனால், ரயில்வே சேவைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை' என, கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.இதற்கிடையே, உத்தர பிரதேசத்தின் பாலியா ரயில்வே நிலையத்தில், சரக்கு ரயில் மோதி, ரயில்வேயின் சீனியர் இன்ஜினியர் ஒருவர் உயிரிழந்தார்.ரயில் நிலையத்தின் இரண்டாவது பிளாட்பாரத்தில் இருந்து, முதல் பிளாட்பாரத்தில் உள்ள தன் அலுவலகத்துக்கு செல்ல, தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, அந்தப் பாதையில் வந்த சரக்கு ரயில் மோதியதில் அவர் உயிரிழந்தார்.