| ADDED : ஆக 23, 2025 01:15 AM
புதுடில்லி: 'விக்ஷித் பாரத்' எனப்படும், வளர்ந்த இந்தியா திட்டத்தை முன்னெடுக்கவும், அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தவும், இரண்டு உயர்மட்டக் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. 'நிடி ஆயோக்' முழுநேர உறுப்பினரும், முன்னாள் அமைச்சரவை செயலருமான ராஜீவ் கவுபா தலைமையில், இரண்டு உயர்மட்ட குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கவுபா தலைமையிலான இரு குழுக்களில் ஒன்று, 'விக்ஷித் பாரத்' திட்ட இலக்குகளை நிறைவேற்றும் பணியிலும், மற்றொன்று நிதி அல்லாத துறை ஒழுங்குமுறை சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தும் பணியிலும் ஈடுபட உள்ளன. இக்குழுக்களில், வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, செலவினம், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான துறை மற்றும் மின்சாரத் துறை செயலர்கள் இடம் பெறுகின்றனர். மேலும் இந்திய தொழில் துறை கூட்டமைப்பு, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு, 'அசோசெம்' எனப்படும், இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சங்கங்கள் ஆகியவற்றின் இயக்குநர்கள் உள்ளிட்ட சில தொழில் துறை தலைவர்களும் இடம் பெறுகின்றனர்.